Tamilnadu
“குடிபோதையில் தகராறு” : ஒன்றாக சுற்றிய நண்பனைக் கொன்ற இளைஞர் - உயிரைப் பறித்த டாஸ்மாக் திறப்பு!
கொரோனா ஊரடங்கு காரணமாக நாடுமுழுவதும் குற்றச் செயல்கள் குறைந்திருந்தன. இந்நிலையில் மத்திய அரசு, மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியது. மத்திய அரசின் அனுமதியை அடுத்து பல மாநிலங்கள் மதுக்கடைகளை திறந்தன.
அதேபோல், அ.தி.மு.க அரசும் தமிழகத்தில் மதுக்கடைகளைத் திறந்து 300 கோடிக்கும் அதிகமாக வருமானம் பார்த்தது. உணவுக்கே வழியில்லை, கொரோனா பாதிப்பு தீவிரம் என பல்வேறு பிரச்னைகளை சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்த இரண்டு நாள்களிலேயே பல பகுதிகளில் சாலை விபத்து, வன்முறைச் சம்பவங்கள் என அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, மதுபோதையினால் மாநிலம் முழுவதும் 15 பேர் கொல்லப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ஒருவர் மதுபோதையில் தனது நண்பனையே குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் நேற்று காலையில், அப்பகுதியில் உள்ள கண்மாய்க் கரையில் அவரது நண்பர் ஆனந்துடன் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
அப்போது முன்பு நடந்த ஒரு பிரச்னை தொடர்பாக, இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. அப்போது ஒருகட்டத்தில் ஆனந்த் பற்றி ஜெயக்குமார் கடுமையாகப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆனந்த் அங்கிருந்த மது பாட்டிலை உடைத்து ஜெயக்குமார் கழுத்து மற்றும் முகத்தில் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த ஜெயக்குமார் ரத்தவெள்ளத்தில் அதே இடத்தில் சரிந்து விழுந்துள்ளார்.
இதனையடுத்து ஆனந்த் பரமக்குடி நகர் காவல் நிலையத்திற்குச் சென்று உண்மையைக் கூறி சரணடைந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலிஸார் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து ஆனந்த்தை சிறையில் அடைத்துள்ளனர் பரமக்குடி போலிஸார். ஒன்றாக சுற்றித் திரிந்த நண்பர்கள் மதுவால் சண்டையிட்டு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!