Tamilnadu
“மது அருந்திவிட்டு தகராறு செய்த கணவன்” : மனைவி, மகள் தீக்குளிப்பு - டாஸ்மாக்கால் முதல்நாளே ஏற்பட்ட சோகம்!
கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.
குறிப்பாக தமிழக மக்கள் உணவுக்கே வழியில்லாமல் அல்லல்படும் சமயத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்து அதன் மூலம் கல்லாவை கட்டும் ஒரு மோசமான முடிவை எடப்பாடி அரசு கையில் எடுத்தது. டாஸ்மாக் கடைகளை திறந்து மேலும் பலரை கொரோனா தொற்றுக்கு ஆளாக்கவே இந்த அரசு ஏற்பாடு செய்வதாக தமிழக மக்கள் குற்றம்சாட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுகுடித்து வீட்டுக்குச் சென்ற ஒருவர் வீட்டில் மனைவியுடன் சண்டையிட்டதால், ஆத்திரமடைந்த மனைவி, மகள் தீக்குளித்த அதிர்ச்சி சம்பவம் அலங்காநல்லூரில் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்தவர்கள் சிவகுமார் - பரமேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு 18 வயதான அர்ச்சனா என்ற மகள் உள்ளார். கட்டிட வேலை செய்துவந்த சிவகுமார் ஊரடங்கால் 35 நாட்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று டாஸ்மாக் திறந்தவுடன் வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு டாஸ்மாக் சென்று மது அருந்திவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். உணவுக்கு வழி இல்லாத இந்த நேரத்தில் இப்படி குடித்துவிட்டு வரலாமா என அவரது மனைவி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் விரக்தி அடைந்த சிவகுமாரின் மனைவி பரமேஸ்வரி மற்றும் அவரது அர்ச்சனா இருவரும் உடலில் மண்ணென்ணெய் ஊற்றித் தீக்குளித்தனர். இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து இருவரையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த அலங்காநல்லூர் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒருமாதமாக வறுமையிலும் சண்டை இல்லாமல் வாழ்ந்த குடும்பத்தை மதுக்கடையைத் திறந்து இந்த அரசாங்கம் அழித்துவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் இயல்பு நிலைக்கு தமிழகம் திரும்பும் என்று சொன்னது இதுதானா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!