Tamilnadu

Zomato டெலிவரி பையில் வைத்து விபரீத பொருளை விற்ற இளைஞர் - கையும் களவுமாக பிடித்த போலிஸ்!

சென்னை பெருங்குடி கிராஸ் தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவர் கடந்த ஒரு வருடமாக சொமேட்டோவில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே மூன்று மாதத்திற்கு முன்பு பணியில் இருந்து விலகிதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வேலைக்கு சென்றாலும் அதிகப்படியான வருமானம் கிடைப்பதில்லை என குணசேகரன் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இதனிடையே, பண பற்றாக்குறை ஏற்பட்டதால் சொமேட்டோ பையில் வைத்து கஞ்சா விற்றால் அதிக வருமானம் கிடைக்கும் எனவும், போலிஸாரிடம் சிக்கவும் வாய்ப்பில்லை என நண்பர் ஒருவர் கூறியதால் பெருங்குடி பகுதியில் தெரிந்த நபரிடம் கஞ்சா வாங்கியுள்ளார்.

பின்னர் தனது இருசக்கர வாகனத்தில் சொமேட்டோ பையில் கஞ்சாவை மறைத்து வைத்து கொண்டு உணவை சப்ளை செய்வது போல் அடையார், மந்தைவெளி, மயிலாப்பூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்த கஞ்சா விற்பனை தொடர்பாக மயிலாப்பூர் தனிப்படை போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலிஸார் விரைந்து அடையார் பகுதியில் உள்ள வன்னாந்துறையில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த குணசேகரனை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

மேலும் அவரிடமிருந்து 10 கிராம் எடையுள்ள 20 கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவர்மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

Also Read: ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த கட்டடத் தொழிலாளி - வாடகைக் கொடுக்க முடியாமல் சாலை ஓரத்தில் குடியேறிய அவலம்!