Tamilnadu

“தடை உத்தரவு மக்களுக்கு மட்டும்தானா?”- எடப்பாடியின் சொந்த ஊரில் ஊரடங்கை தொடர்ந்து மீறும் அ.தி.மு.கவினர்!

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 144 தடை உத்தரவு அமலில் உள்ளபோது 5 பேருக்கு மேல் கூட்டமாக கூடக் கூடாது என்பது விதிமுறை.

ஆனாலும், சிலர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி தேவையின்றி வெளியில் சுற்றித் திரிகின்றனர். அதிலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் முக்கிய நிர்வாகிகள் ஊரடங்கை மதிக்காமல் கூட்டம் நடத்துவது, வாகனங்களில் ஊர் சுற்றுவது ஆகிய நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பது சமூக ஊடகம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வளையமாதேவி என்ற கிராமத்தில் ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் சேகர் தலைமையில் நேற்று அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஆத்தூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வரும் சமூக இடைவெளியை சற்றும் கடைபிடிக்காமல் ஒன்றிய செயலாளர் சேகர் வீட்டில் அருகருகே அமர்ந்தபடி கூட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் தடை உத்தரவை மீறி கூட்டம் நடத்திய அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் உட்பட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சிவலிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் தடை உத்தரவு, எதிர்க்கட்சியினர் மற்றும் மக்களுக்கு மட்டும்தானா என்று கேள்வி எழுப்பிய அவர் ஆளுங்கட்சியினர் அத்துமீறி இதுபோன்று கூட்டங்கள் நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read: ஊரடங்கை மதிக்காமல் மது போதையில் காரில் சுற்றிய அ.தி.மு.க பிரமுகர் - பெண் எஸ்.ஐ-யிடம் வாக்குவாதம்! Video