Tamilnadu

“மருத்துவ மாணவி மர்ம மரணம் - விடுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்” : தீவிர விசாரணையில் இறங்கிய போலிஸ்!

நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா பாதிப்பிற்கு எதிராக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா சிகிச்சைப் பிரிவு மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்களுக்கு தனி விடுதி மற்றும் அரசு ஏற்பாடு செய்துக்கொடுத்த இடத்தில் தங்கி இருந்து சேவை செய்து வருகின்றனர்.

அந்தவகையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் விடுதிகள் ஏற்பாடு செய்துக் கொடுத்துள்ளனர். அந்த விடுதியில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவந்த மருத்துவ மாணவி பிரதீபா வீட்டிற்குச் செல்லாமல் தங்கியிருந்து மருத்துவ பணியை மேற்கொண்டுவந்தார்.

இந்நிலையில், இன்றைய தினம் பிரதீபா தங்கியிருந்த அறையின் கதவுகள் நீண்டநேரமாகியும் திறக்கத்தால் சந்தேகம் அடைந்த சக மாணவிகள் விடுதி நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் விடுதி வார்டன் வந்து நீண்ட நேரமாக கதவைத் தட்டு சத்தம் எழுப்பினர். உள்ளே இருந்து எந்த பதிலும் வராதநிலையில், கீழ்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்தில் போலிஸார் வந்தனர்.

பின்னர் போலிஸார் அறைக் கதவுகளை உடைத்து உள்ளேப் பார்த்தப்போது பிரதீபா எந்த அசைவின்றி கிடந்ததார். இதனையடுத்து கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக பிரதீபாவை அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இதனையடுத்து உயிரிழந்த மாணவி பிரதீபாவின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து பெற்றோர்கள் சடலத்தைப் பார்த்து கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அப்போது தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குவந்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் அதிகாரிகள் மாணவி மரணம் குறித்து விசாரித்தனர். மேலும் விசாரணையை தீவிரப்படுத்தவும் போலிஸாருக்கு உத்தரவிட்டனர்.

தற்போது வரை மாணவி மரணம் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில் பிரதீபாவின் நண்பர்கள், பணியாற்றிய இடம் உள்ளிட்ட இடங்களில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ரஷ்ய நாட்டின் பிரதமருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - தீவிர பரிசோதனையில் மிகைல் மிஷிஸ்தின்: அதிர்ச்சி தகவல்!