Tamilnadu

“NEETல் அதிக மார்க் எடுத்தும் மேற்படிப்பில் இடமில்லை”- மருத்துவர் தொடர்ந்த வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் ஆணை!

மருத்துவ மேற்படிப்புக்கு, தொலைதூர, கடினமான மற்றும் ஊரகப் பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மூளைச்சாவு பராமரிப்பு மைய முதுநிலை நிபுணராக பணியாற்றி வரும் மருத்துவர் ஜி.பி.அருள்ராஜ், தனக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்கி கலந்தாய்வுக்கு அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும், சலுகை மதிப்பெண்கள் வழங்கப்படாததால் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியாத நிலை உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், 24 மணி நேரமும் கடினமான பணியை மேற்கொள்ளும் அனைத்து மருத்துவர்களுக்கும் சலுகை மதிப்பெண்கள் அளிக்க உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.செல்வம் தலைமையிலான குழு அரசுக்கு பரிந்துரைத்துள்ளதையும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வழக்கை, வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் விசாரித்த நீதிபதி பார்த்திபன் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் சலுகை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு வரும் மே 6ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை 8 தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Also Read: “ஜூலை மாதத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள்” - யு.ஜி.சி அறிவுறுத்தல்!