Tamilnadu
விவசாயிகளுக்கு இழப்பீடு கேட்டால் தனிமைப்படுத்தச் சொல்லி வாய்ப்பந்தல் போடுவதா? - பி.ஆர். பாண்டியன் கண்டனம்
மத்திய, மாநில அரசுகள் உத்திரவாதத்தை ஏற்றே சுமார் 6 லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகளை வேளான் விற்பனை நிலையங்களில் அடுக்கி வைத்தோம். ஆனால் கோடை மழை அவை அனைத்தும் வீணானது, விளைவித்த விவசாயிகளின் கண்களை குளமாக்கியுள்ளது என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய மாநில அரசுகளிடம் இழப்பீடு கோரி வலியுறுத்தியுள்ளார்.
அதில், “தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் உற்பத்தி செய்த காய்கனி, உணவு உற்பத்தி பொருட்கள் அழிந்து வருவதால் மறு உற்பத்தி செய்ய இயலுமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு விவசாயிகளின் பாதிப்பிற்கு இழப்பீடு, கடன் தள்ளுப்படி செய்ய மறுத்து கரோனா பாதுகாப்பு என்ற பெயரில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என வாயால் பந்தல் போட நினைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விவசாய உற்பத்திப் பொருட்கள் அனைத்தையும் மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்ய முன்வர வேண்டும். அப்படி கொள்முதல் செய்யும் பொருட்களில் தற்போதைய தேவைக்கு போக மீதி கிடங்குகளில் அரசே இருப்பு வைத்து பாதுகாக்க முன்வர வேண்டும்.
விவசாயிகள் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மறு உற்பத்திக்கு தேவையான கடன் வழங்க முன்வர வேண்டும். உற்பத்தி செய்யப்பட்ட நெல் முழுவதையும் அரசே கொள்முதல் செய்யும் என மத்திய, மாநில அரசுகள் உத்திரவாதமளித்ததை ஏற்று திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்கள், மற்றும் வேளாண் விற்பனை மைய வாயில்களிலும் அடுக்கி வைக்கப்பட்டன.
அவ்வாறு அடுக்கி வைக்கப்பட்ட அனைத்து மூட்டைகளும் தற்போது பெய்து வரும் கோடை மழையில் நனைந்து கிடப்பதை பார்த்து விவசாயிகள் கதறுகிறார்கள். இதனால் ஏற்பட்டுள்ள இழப்பை அரசே ஏற்க வேண்டும். நனைந்த நெல் மூட்டைகள் முழுவதையும் அரசே நிபந்தனையின்றி கொள்முதல் செய்து உடன் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைத்திட சிறப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்க்கொள்ள வேண்டும்.
கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் மருத்துவமனைகளை நோக்கி ஓடவில்லை. மாறாக மளிகை, காய் கனி கடைகளை நோக்கி படையெடுப்பதை பார்க்கும் போது அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்களின் பாதிப்பை கருத்தில் கொண்டு ஓர் ஆண்டு சாகுபடியை நிறுத்தினால் நிலைமை என்னவாகும் ஆகும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும்.
சவால் விட்டு சொல்லுகிறேன் இனி கிராமப் பகுதிகளில் கொரோனா பாதிப்பிலிருந்து விவசாயிகளாகிய நாங்கள் எங்களை பாதுகாத்துக் கொள்ள தயாராகிவிட்டோம். ஆனால் அரசு விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருளை உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்ய தயாரா?
தமிழக அரசு கிடங்குகளுக்கான சலுகைகள் அறிவிப்பது விவசாயிகளுக்கு பலனளிக்காது. இந்தியா உட்பட உலக நாடுகள் உணவு பொருள் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் என ஐநா சபைக்கான உணவு பாதுகாப்பு குழு அதிகரிகள் எச்சரிக்கை விடுவதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான கோதுமை மட்டும் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளது. அரிசி இருப்பு குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
எனவே தென் மாநிலங்கள் 80% நெல் உற்பத்தியைத் தான் உணவாக பயன்படுத்துகிறோம் என்பதை மத்திய அரசுக்கு எடுத்துரைத்து அனுமதியைப் பெற்று தமிழக அரசே நெல் உட்பட அனைத்து விவசாய உணவு உற்பத்தி பொருள்களையும் நிபந்தனையின்றி லாபகரமான விலை நிர்ணயித்து கொள்முதல் செய்து கிடங்குகளில் சேமித்து வைத்து தட்டுபாடு காலத்தில் மக்களுக்கு விநியோகிக்க முன் வரவேண்டும்.
மறுக்கும் பட்சத்தில் இதே நிலை தொடருமேயானால் மத்திய அரசை எதிர்த்து விவசாயிகளை ஒன்றுப்படுத்தி விவசாயப் பணிகள் மேற்க்கொள்வதை கைவிட்டு உற்பத்தியை நிறுத்தி வைத்து தீவிரமான போராட்டத்தில் களமிரங்குவோம் என எச்சரிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!