Tamilnadu

“நிறைமாத கர்ப்பிணி பெண்களை நடுரோட்டில் இறக்கி நடக்க வைத்த கொடூரம்” : மனிதநேயத்தை மறந்த போடி போலிஸ்!

தேனி மாவட்டம் போடி பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திகா மற்றும் அபர்ணா. வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த இவர்கள் இருவருக்குமே போலிஸாரால் ஒரே கொடுமை நடந்துள்ளது. அதாவது அவர்கள் இருவரும் போடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காகச் செல்வதற்காக அவரவர் வீட்டின் அருகில் இருக்கும் ஆட்டோ ஒட்டுநரை அழைத்து மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் ஆட்டோ ஓட்டியதாகக் கூறி ஓட்டுநர் சொல்வதை என்னவென்று கூட கேட்காமல் ஆட்டோவை பறிமுதல் செய்துள்ளனர். இதனால் நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள் கடும் வெயிலில் நடந்தே வீட்டுக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதுதொடர்பாக கார்த்திகாவை சந்தித்து நடந்ததைக் கேட்டோம். அப்போது பேசிய கார்த்திகா, “நாளை மறுநாள் அதாவது ஞாயிறுக்கிழமைன்று எனக்குப் பிரசவ நாள். அதனால் முன்கூட்டியே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என நினைத்து தேனி அரசு மருத்துவமனைக்குச் செல்ல எங்கள் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டும் அண்ணன் முரளியை அழைத்து நானும் என் அம்மாவும் மருத்துவமனைக்குச் சென்றோம்.

கார்த்திகா

நீண்ட நேரமாகும் என்பதால் அவரை வீட்டுக்குச் சென்றுவிட்டு வரச் சொல்லி அனுப்பி வைத்துவிட்டோம். பின்னர் பரிசோதனை முடிந்து அவருக்கு தொடர்புகொண்டபோது போலிஸார் வரும் வழியில் ஆட்டோவை மடக்கிப் பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறினார். இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

பின்னர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல் என்னால் தானே ஆனது என எண்ணி, அவரை அழைத்துவர போடி காவல்நிலையத்திற்கு நடந்தே சென்றோம். அங்கு அவர் எனக்காகத்தான் வந்தார் எனக் கூறியும் போலிஸார் இரக்கம் காட்டவில்லை; அவரை விடவில்லை” எனத் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தின்போதே பாதிக்கப்பட்ட மற்றொரு கர்ப்பிணிப் பெண் அபர்ணா பேசும்போது, “பிரசவ தேதிக்கு இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால் பரிசோதனைக்காக என் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் ஆட்டோவில் மருத்துவமனைக்குச் சென்றேன். செல்லும் வழியிலேயே போலிஸார் ஆட்டோவை தடுத்தனர்.

கார்த்திகா

மருத்துவமனைக்குச் செல்வதாகக் கூறியும் விடாமல் ஆட்டோவில் இருந்த என்னை கீழே இறக்கிவிட்டு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நாங்கள் சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளாத போலிஸார் ஆம்புலன்ஸ் வரும் அதில் ஏறி மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என கூறினார்.

பின்னர் அவர்கள் சொன்ன நேரத்தில் இருந்து 1 மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தேன். எந்த ஆம்புலன்ஸும் வரவில்லை. இனி இவர்களை நம்பிப் பலனில்லை என மருத்துவமனை செல்லாமல் நடந்தே வீட்டிற்கு வந்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் ஊரடங்கைக் கடைபிடிக்க அறிவுறுத்துவதும் அதனைக் கண்காணிக்க வேண்டியதும் காவல்துறையின் வேலையே தவிர இதுபோன்ற மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். இதுபோன்ற காவலர்கள் இருப்பது காவல்துறைக்கே பெருத்த அவமானம்.

அபர்ணா

அதுவும் துணை முதல்வரின் சொந்தத் தொகுதியில் போலிஸார் இப்படி நடந்துகொள்வதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. போலிஸாரின் மனிதநேயமற்ற இந்த செயலுக்கு துறைரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: "மனசாட்சியை அடகுவைத்து பொய்களை அள்ளிவீசுவது எதற்காக?” - ஓ.பன்னீர்செல்வத்துக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி!