Tamilnadu
விவசாயக் கிணறுகளில் சாயக்கழிவுகளை கலந்த விஷமிகள் - ஊரடங்கின்போது விவசாயிகளுக்கு நேர்ந்த கொடுமை!
கொரோனா பாதிப்பு அதிகரித்தையடுத்து நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு கரணமாக அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையிலும் ஊரடங்கின் போது சில சாயப்பட்டறை ஆலைகள் விவசாயக் கிணற்றில் சாயக் கழிவுகளைக் கலந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகளால் விளைநிலங்கள் பாழடைவதாக விவசாயிகள் பல்வேறு போராட்டத்தை முன்னெடுத்தனர். இறுதியாக நீதிமன்றம் சென்ற விவசாயிகள் கரூரில் இயங்கி வரும் சாயப்பட்டறைகளால் நிலத்தடி நீரைக் குடிக்க முடியாத வகையில், நிலம் கெட்டுப் போயுள்ளதாகவும், இதனால் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் விஷமாகவும், பல இடங்களில் நீர் உப்புத்தன்மை கொண்டதாக மாறிப் போனதாகவும் வாதாடி ஆலை இயங்க தடையும் வாங்கினார்கள்.
நீதிமன்றம் மூலம் 300க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மூடப்பட்டன. தற்போது 50க்கும் குறைவான ஆலைகளே இயங்கி வருகின்றன. இயங்கும் ஆலைகளுக்கும் மறுசுழற்சி செய்து பாதுகாப்பாக ஆலைக் கழிவை அகற்றவேண்டும் என உத்தரவிடப்பட்டது.
ஆனால் மறுசுழற்சி செய்தால் அதிக செலவாகும் என்பதால் அவ்வப்போது குறிப்பாக மழைக் காலங்களில் சாயக்கழிவுகளை ஆறுகளில் கலந்துவிடும் திருட்டுத்தனம் நடந்துவந்தது. அதனையும் ஊர் மக்கள் கண்காணித்துத் தடுத்து வந்தனர். அதனால் ஓரளவு பிரச்னை ஓய்ந்தது.
ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கால் முப்பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு சொந்தமான இரண்டு கிணற்றில் ஆலையைச் சேர்ந்த மர்ம நபர்கள் சாயக்கழிவைக் கலந்துள்ளனர். இதனால் இரண்டு கிணறுகளும் சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள மாங்காசோளிபாளையத்தில் உள்ள ராமசாமி, அம்மையப்பன் என்பவரின் வாரிசுகளின் கிணற்றில் சாயக்கழிவுகளை கொட்டியுள்ளனர். இந்த கிணற்றில் உள்ள தண்ணீரை நம்பித்தான் 10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பிழைப்பை நடத்தி வருகின்றனர்.
இனி கோடைக்காலம் என்பதால் இருக்கின்ற நிலத்தடி நீரை எப்படி பாதுகாக்கப்போகிறோம் என கவலையில் இருந்தோம். ஆனால் இப்போது என்ன செய்யப்போகிறோம் என விவசாயிகள் கண்ணீருடன் கிணற்றைச் சுற்றிக் கதறி அழுத காட்சி மனதை வாட்டியுள்ளது.
விவசாயிகள் இல்லாத நேரங்களில் இதுபோல திருட்டுத் தனமான வேலையைச் செய்த மர்ம நபர்களைக் கைது செய்து அவர்களின் ஆலைகளை சீல் வைக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!