Tamilnadu

“கண்டெய்னர் லாரியில் நெருக்கியடித்து பயணித்த புலம்பெயர் தொழிலாளர்கள்” - அவல நிலைக்கு முடிவு எப்போது?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் துவங்கியதை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு கடுமையாக அமலில் உள்ளது. எந்த வித ஏற்பாடுகளும் இன்றி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாகவே தங்கள் சொந்த கிராமத்திற்கு சென்றனர்.

இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் உணவின்றியும் சாலை விபத்திலும் உயிரிழந்தனர். மேலும் பலர் ஆங்காங்கே தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவுகள் கொடுக்கப்பட்டாலும் வேலையில்லாமலும், குடும்பத்தினரை பார்க்கவேண்டும் என்ற ஏக்கத்திலும் பலரும் லாரிகள் மூலம் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முயற்சிக்கின்றனர்.

அந்த வகையில், கேரளாவில் இருந்து ராஜஸ்தானுக்குச் செல்ல முயன்ற 20க்கும் மேற்பட்டோர் கண்டெய்னர் லாரியில் பயணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் அவர்களைத் தடுத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குவந்த கண்டெய்னர் லாரியைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது லாரிக்குள் 24 பேர் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களிடம் போலிஸார் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கேரளாவில் திருவனந்தபுரத்தில் தள்ளுவண்டியில் கடலை விற்றுவந்ததாகவும் கூறியுள்ளனர். ஊரடங்கால் வாழ்வாதாரமின்றி இருப்பதால் தங்களது சொந்த ஊருக்குச் செல்வதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் லாரி ஓசூர் வரை செல்வதாக ஓட்டுநர் கூறியதால் அதுவரை தற்போது செல்லவிருந்தோம் எனத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து லாரி ஓட்டுநர் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலூர் பேரூராட்சி ஊழியர்கள் உணவு வழங்கினர். மேலும், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்தியுள்ளனர். கண்டெய்னர் லாரியில் தொழிலாளர்கள் பயணம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Break The Chain: “புலம்பெயர்ந்த கேரளத்தினருக்காக ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை” - பினராயி அரசு அறிவிப்பு!