Tamilnadu
“இல்லையென இற்றுப் போனதோ மனிதநேயம்? - இறப்பும் கௌரவமாக நிகழவேண்டும்” : தமிழச்சி தங்கபாண்டியன் ஆதங்கம்!
தமிழகத்தில் இரண்டாவது முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவரின் உடலை எரிக்கவிடாமல் பொதுமக்கள் சிலர் சுகாதாரத்துறையினர் மீது தாக்குதல் நடந்தியுள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவரின் உடலை எரிக்க விடாமல், மக்கள் பிரச்னை செய்ததும் பின்னர் காவல்துறை தலையீட்டின் மூலம் மருத்துவர் உடல் அடக்கம் செய்யப்பட்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவர் சைமனுக்கு, என் ஆழ்ந்த அஞ்சலி! அவர்தம் குடும்பத்தினருக்கு குற்றவுணர்வின் சுமையோடு கூடிய எனது அனுதாபங்கள்.
கடுமையான இக்கொரானா காலகட்டத்தில் மிகச் சமீபத்தில் மனம் மிகக் கனத்துத் தூக்கமின்றிப் பாரமானது இரண்டு நிகழ்வுகளினால். இரண்டுமே மனித மாண்புகள் இல்லையென இற்றுப் போனதோ என்கிற துயரக் கேள்வியை முன் வைத்த இழப்புகள்.
ஆந்திராவைச் சேர்ந்த ஒரு மருத்துவரை அடக்கம் செய்ய முனைகையில் எழுந்த எதிர்ப்பு முதல் துக்கம் என்றால், இதோ, நேற்று கொரோனா தொற்றிற்காக மருத்துவர் சைமன் சிகிச்சை பெற்று, பலனளிக்காமல் மரணமடைந்தவுடன் அடக்கம் செய்யப் பொதுமக்கள் காட்டிய எதிர்ப்பும், அரசு இவ்விசயத்தில் காட்டிய அலட்சியமும் பெருந்துக்கம்!
பிறப்பைப் போலவே ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பும் கௌரவமாக நிகழ வேண்டும். அதிலும் இறப்பின் பின்பான அஞ்சலியும், அடக்கமும் முழு கௌரவத்துடன் நிகழ வேண்டும் என்பது தானே தமிழர்களின் பண்பாடும், மாண்பும்!
ஆனால், நம் இன்னுயிரைக் காக்கும் பணியின் போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, இறந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்யப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்ற அவல நிகழ்வு அரங்கேறியிருக்கிறது. அவர்களது பயம் களைந்து, மருத்துவருக்கான நல்லடக்கம் நடைபெற உதவ வேண்டிய அரசு இயந்திரமோ தாமதமாகவே விழித்தெழுந்துள்ளது.
நாம் நம் விழுமியங்களை இழந்துவிட்டோமா என்ன? ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய’ வள்ளலாரையும், ‘ காதற்ற ஊசியும் வாராது காண் உன் கடை வழிக்கே’ என்ற பட்டினத்தாரையும் மறந்து, மனித நேயத்தைத் தொலைத்து விட்டோமா? நம் வீட்டில், சுற்றத்தில் எவரையேனும் இழக்க நேர்ந்தால்... இப்படித்தான் பகுத்தறிவற்ற தன்னலவாதிகளாவோமா?
இந்த அரசின் கடமை என்ன?
பேரிடர் காலங்களில் தனது உயிரைத் துச்சமெனக் கருதி, மக்களுக்காக தொடர்ந்து சேவையாற்றி வரும், மருத்துவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வது; கொரோனா தொற்று இறப்புகளைக் கையாள்வது பற்றிய விழிப்புணர்வையும், புரிதலையும் மக்களிடையே ஏற்படுத்துவது;
மரணிப்பவர்களைத் தகனம் செய்ய, ஒரு 'நிலையான இயக்க நடைமுறை' ஒன்றை முன்னரே உருவாக்கி, அதனைக் குடிமக்களுக்குத் தெரியப் படுத்துவது; சிகிச்சை பலனின்றி மரணிப்பவர்களை மனிதநேய மாண்புடன் அடக்கம் செய்ய அரசுத்துறைகளுக்கு அறிவுறுத்தி, அவர்தம் மரணத்தால் துக்கமுற்றிருக்கின்ற உறவினர்களுக்கு முறையான அடக்கம் நடைபெற உதவுவது; மேற்சொன்ன எதனையும் அமல்படுத்தாத இந்த அரசிற்கு வன்மையான கண்டனம்.
இத்தகைய அவலங்கள் நடந்தபின்பு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட, திட்டமிடலுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இனி வருங்காலத்திலாவது இத்தகைய இழி நிகழ்வுகள் நடக்காமல் தடுக்க வேண்டியது அரசின் கடமை.
மனித நேயமே மாபெரும் சொத்து!
அதை மறந்தோமெனில்,
நாமனைவரும் நடமாடும் பிணங்களே!
சக மனிதர்களை, மனுஷியை அன்பாய் அரவணைக்கக் கூட முடியாத இக்கொடிய நாட்களை நாம் நேயத்தினால் மட்டுமே கடந்து செல்ல முடியும்! நேசிப்போம்... கடந்து செல்வோம்!” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!