Tamilnadu
“ஒருபக்கம் கைதட்டி கொண்டாட்டம் - மறுபக்கம் மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு” : தொடரும் அவலம்!
உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் தீவிரமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முன்னிலையில் இருந்து போராடும் மருத்துவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது.
குறிப்பாக PPE - என்று சொல்லக்கூடிய பாதுகாப்பான தற்காப்பு உடைகள் போன்றவை இல்லாமல் மருத்துவர்களும் செவிலியர்களும் கடும் நெருக்கடியை சந்திக்கின்றனர். சில இடங்களில் பிளாஸ்டிக் ரெயின் கோர்ட் ஆடையை அணிந்து மருந்துவம் பார்க்கின்றனர். இதனால் நாட்டில் பல பகுதியைச் சேர்ந்த மருத்துவர்களும் செவிலியர்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கைதட்டி உற்சாகப்படுத்துங்கள் என நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். அதனையடுத்து பிரதமரின் கோரிக்கைகளை ஏற்று கைதட்டி கரவோசம் எழுப்பி உற்சாகப்படுத்திய மக்கள் இன்று தங்கள் உயிர் என வரும் பொழுது தங்களின் சுயரூபத்தை வெட்க்காட்டத் துவங்கியுள்ளனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து உயிரிழந்த மருத்துவர்கள், சடலமான பின்னர் அவர்களின் உடல்கள் பல மோசமான சூழலை சந்திக்கும் சூழல் இந்தியாவில் உருவாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனா பாதித்து சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரின் உடலை எரிக்க மருத்துவத்துறை ஊழியர்கள் முயன்றபோது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சுகாதாரத்துறை ஊழியர்கள் பரிதவித்தனர். தமிழகத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் மருத்துவர்களுக்கு இந்த நிலை தான் காணப்படுகிறது. குறிப்பாக கடந்த வாரம் மேகாலயாவில் இதே பிரச்சனை தான் ஏற்பட்டது.
இந்நிலையில் மீண்டும் தமிழகத்தில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கபட்டு உயிரிழந்த மருத்துவரின் உடலை எரிக்க விடாமல், ஊழியர்கள் மீதும் மருத்துவர்கள் மீதும் தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் இயக்குநராக இருக்கும் 58 வயதான மருத்துவர் ஒருவர் கொரோனா பாதிப்பால் நேற்றைய தினம் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடலை அடக்கம் செய்வதற்காக கீழ்ப்பாக்கம் மின்மயானம் கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க அண்ணா நகர் வேலங்காடு பகுதியில் உள்ள மின்மயானத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த செய்தியை அறிந்த அப்பகுதி மக்கள் வாகனத்தை மயானத்திற்குள் விடாமல் தகராறில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனிடையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணா நகர் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து கலைக்க முன்றனர். அப்போது அவர்களில் சிலர் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்தன. மேலும், ஆம்புலன்ஸில் இருந்த பணியாளர்கள் இருவர் காயமடைந்தனர்.
இதனையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு தாக்குதல் நடத்திய 20 பேரை அடையாளம் கண்டு அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் போலீஸ் பாதுகாப்போடு மருத்துவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சுகாதார பணியாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் காவல்துறை கூடுதல் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என அவ்வமைப்புகள் சார்பில் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய மருத்துவர் ஒருவர், “மக்கள் இதுபோல நடந்துக்கொண்டது மிகுந்த வேதனை அளிக்கிறது. ,கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அதே கொரோனாவல் உயிரிழந்தால் அவருக்கு நீங்கள் செய்யும் மரியாதை இதுதானா? மக்கள் உணர்ந்து செயல்படுங்கள். அரசு போதிய கவனம் செலுத்தவேண்டும்” எனத் தெரிவித்தார்.
மருத்துவர்களுக்கு உற்சாகம் ஏற்பட கைதட்ட சொன்ன பிரதமர் மோடி, மருத்துவர்களின் சடலங்களுக்கு ஏற்படும் நிலை குறித்து பேசவேண்டும். குறைந்தபட்சம் மக்களை எச்சரிக்க பிரதமர் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!