Tamilnadu
பசியால் தவித்த குடும்பத்தை காப்பாற்ற நினைத்த ஆட்டோ ஓட்டுநர்: இரண்டு கையையும் உடைத்த ‘வெறி’ பிடித்த போலிஸ்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கொரோனா வைரஸைத் தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் வெளிவராதபடி பார்த்துக்கொள்ளும் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்ட காவலர்கள் ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதும், வாகனங்களை பறிமுதல் செய்வதும் மேற்கொண்டு வந்தனர்.
சில இடங்களில் லத்தியால் பொதுமக்களை தாக்கும் சம்பவம் நடந்துள்ளது. தற்போது ஒருபடி மேலேச்சென்று ரவுடி கும்பல் கூட்டாகச் சேர்ந்து ஒருவரை கொடூரமாக தாக்குவது போல வட சென்னையில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை இரண்டு போலீஸார் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி தீடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் தினசரி கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது. அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகள் முழுமையாக சென்றடையாமல் மிகுந்த ஏழ்மை நிலைக்கு தினசரி கூலித் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வட சென்னை ஆர்.கே நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாபு. இவர் கடந்த 2 வாரங்களாக பணிக்குச் செல்லாததால் அவரது குடும்பத்தினர் உணவின்றி தவித்துள்ளனர். குடும்பத்தினர் பசியால் வாடுவதைத் தாங்கமுடியாமல் காலையில் ஆட்டோவை எடுத்துக்கொண்டு சவாரிக்குச் செல்லலாம் என முடிவெடுத்துள்ளார். வடசென்னை பகுதியில் உள்ள சிறு கடைக்காரர்கள் மார்க்கெட் செல்ல ஆட்டோ சவாரி தேவைப்படுவதால் தனது ஆட்டோவை எடுத்துக்கொண்டு நேற்றைய தினம் காலையில் 8 மணி போல் வீட்டை விட்டு கிளம்பியுள்ளார்.
இவரது வீடும் ஆர்.கே.நகர் பிரதான சாலையும் அருகருகே என்பதால் வெறும் 500 மீட்டரிலேயே போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனைப் பார்த்த ஆட்டோ ஓட்டுநர் பாபு அச்சத்தில் ஆட்டோவைத் திருப்பிக்கொண்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் வெளியே ஆட்டோவை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்ற பாபுவை பின் தொடர்ந்துவந்த 2 போலீஸார் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அப்போது அருகில் இருந்த கிரிக்கெட் ஸ்டெம் கட்டையைக் கொண்டு பாபுவைக் கொடூரமாக தாக்கி அவரை ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்று அங்கேயும் தாக்கியுள்ளனர். இவ்வளவு கொடூர தண்டனைகளை கொடுத்தப்பிறகும் அவரின் ஆட்டோவையும் பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி லோகநாதன் காவல்நிலையத்தில் இருந்து பாபுவை மீட்டு ஸ்டேன்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு பாபுவின் இரண்டு கைகளின் எலும்புகளும் உடைக்கப்பட்டுள்ளதாக கூறி மருத்துவமனையில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சைக்காக தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக லோகநாதன் கூறுகையில், “சாப்பாட்டுக்கே வழியில்லாமல் பசி தன் குடும்பத்தை கொள்ளுகின்ற நேரத்தில் ஒரு நூறு ரூபாய் கிடைக்கும் என்று ஒரு சவாரி எடுக்க போனவர், இனி ஆறு மாதம் வரை தன் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவார்.
காவல்துறை ஆய்வாளர் மற்றும் உயர் அதிகாரிகள் யாரையும் தரக்குறைவாக நடத்த வேண்டாம் என வலியுறுத்திய போதும், இதுபோன்ற ஒன்றிரண்டு காவலர்களால் ஒட்டுமொத்த காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.
எனவே மேற்படி அதிகாரிகள் காவலர் மனோகரன் உள்ளிட்ட இரண்டு காவலர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். மாண்புமிகு நீதிபதி அரசர்களும் இவற்றைத் தாமாக முன்வந்து வழக்கு எடுத்து சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் முழுமையாக நம்புகிறோம்.
காவல்துறையினரும் அரசும் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும், 144 தடை உத்தரவு மூலம் ஊரை அடக்கலாம் ஆனால் உழைப்பாளிகளின் பசியை ஒருபோதும் அடக்கமுடியாது. சட்டத்தை மனிதநேயத்தோடு அணுகுங்கள்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளிடமும், மனித உரிமை ஆணையத்தையும் அனுக உள்ளதாக லோகநாதன் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!