Tamilnadu

“தயவு செய்து எங்களை அசிங்கப்படுத்தாதீங்க”- அ.தி.மு.க அரசு வழங்கிய ரேசன் பொருளால் கொதித்த மாற்றுத்திறனாளி!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பிக்கள் தங்களது தொகுதிக்குத் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் செய்து வருகின்றனர். தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் கொரோனாவை எதிர்க்க ஒன்றுகூடி போராடி வரும் வேளையில், தமிழகத்தில் ஆளுங்கட்சியாக செயல்படும் அ.தி.மு.க தனித்து தன்போக்கில் செயல்பட்டு வருகிறது.

அ.தி.மு.க வெற்றி பெற்ற தொகுதிகளில் கூட மக்களுக்கு தேவையான உதவிகளை அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆளுங்கட்சியினரின் தூண்டுதலின் பேரில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் ஒதுக்கிய நிதியையும், மருத்துவ உபகரணங்களையும் வாங்க மறுக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் பணம் மற்றும் இலவசப் பொருட்கள் வழங்குவதாக முதல்வர் அறிவித்தார். ஆனால் அரசு வழங்கும் இலவச பொருள்கள் தரமில்லாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான நலத்திட்ட உதவிகள் பெற அவசர உதவி எண்ணை அரசு அறிமுகப்படுத்தியது. அரசின் இந்த அறிவிப்பை அறிந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தனக்கு உதவி தேவை எனக் கேட்டுள்ளார்.

அதன்படி இன்று அரசு அதிகாரிகள் மாற்றுத்திறனாளியின் வீட்டிற்கு வந்து ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளனர். அதிகாரிகள் சென்றபிறகு அரசு கொடுத்த பொருட்களை உணர்ந்த மாற்றுதிறனாளி அதிர்ச்சி அடைந்தார்.

அதற்குக் காரணம், ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருள்களை தருவதாகச் சொல்லிவிட்டு 10 கிலோ அரிசி, 1/2 கிலோ பருப்பு, 1/2 கிலோ சர்க்கரை, மூன்று உருளைக் கிழங்கு மற்றும் தக்காளி, 5 வெங்காயம் ஆகியவற்றை மட்டுமே கொடுத்துள்ளனர். இதனை வைத்து ஒரு குடும்பம் எப்படி ஒரு மாதத்திற்குச் சாப்பிடமுடியும்?

இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட அவர், “ஏற்கெனவே அரசு தருவதாகச் சொன்ன 1,000 ரூபாயும் வரவில்லை. தயவு செய்து இந்த அரசு எங்களுக்கு பொருட்கள் வழங்கியதாக கணக்கு காட்டி அசிங்கப்படுத்த வேண்டாம். இந்த 4 பொருட்களை கொடுக்க எத்தனை போட்டோ எடுக்குறாங்க. மாற்றுத்திறனாளிகளை ஒரு காட்சிப் பொருளாகத்தான் பார்க்குறாங்க” என வேதனை தெரிவித்துள்ளார்.

Also Read: “தி.மு.க எம்.எல்.ஏ-வின் நிதியை பெற மறுக்கும் அ.தி.மு.க அரசு”: காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்யும் எடப்பாடி!