Tamilnadu

கொரோனாவை வைத்து பிரிவினையை உண்டாக்குவதா? வெறுப்பு பிரசாரம் செய்த மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு

கொரோனா தொற்றோடு இஸ்லாமிய அமைப்பை தொடர்புப்படுத்தி சமூகவலைதளங்களில் வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் மீது மேலப்பாளையம் போலிஸார் 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸின் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவால் இந்தியாவில் 3,000த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் மூலம் கொரோனா வைரஸை இஸ்லாமியர்கள் திட்டமிட்டுப் பரப்பியதாக இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு பிரச்சாரத்தை இந்துத்துவா கும்பல்கள் தீவிரமாகப் பரப்பி வருகின்றனர்.

அந்த வகையில், சமூக வலைதளங்களில் பா.ஜ.க. ஆதரவு கருத்துகளைத் தெரிவித்து வரும் மாரிதாஸ் கொரோனா தொற்றோடு இஸ்லாமிய அமைப்பை தொடர்புப்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து, நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது காதர் மீரான் என்பவர் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் இஸ்லாமிய அமைப்போடு கொரோனா தொற்றை தொடர்புப்படுத்தி கருத்துக்களைப் பரப்பிவரும் மாரிதாஸை கைது செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின் அடிப்படையில், மாரிதாஸ் மீது மதங்களிடையே ஒற்றுமையைக் குலைப்பது, பிற மதங்களை அவதூறாக பேசுவது, மதங்கள் அடிப்படையில் பொது மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவது, சமூக விரோத கருத்துக்களைப் பரப்பி பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்துவது ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் மேலப்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து, ட்விட்டரில் மாரிதாஸை கைது செய்யக்கோரி இணையவாசிகள் #ArrestMaridhas என்கிற ஹேஷ்டேகை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

Also Read: “தப்லிகி ஜமாத்தை சேர்ந்த கொரோனா பாதித்தவர் போலிஸ் மீது எச்சில் துப்பினாரா?” - உண்மை அம்பலம்! #FactCheck