Tamilnadu

“வேலைக்கு வந்தால்தான் சம்பளம்” : தேயிலைத் தொழிலாளர்களை மிரட்டும் எஸ்டேட் நிர்வாகம் - கவனிக்குமா அரசு?

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று காரணமாக 47 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்திவாசிய தேவையின்றி மக்கள் வெளியே வரக் கூடாது என்றும், நிறுவனங்கள் இயங்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்துக்குத் தடை இல்லை என்று அரசு அறிவித்திருக்கும் நிலையில், அந்தப் பட்டியலில் தேயிலையையும் சேர்த்து, தோட்டத் தொழிலாளர்களை அன்றாடப் பணிக்கு வரச் சொல்லி நீலகிரி தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் கட்டாயப்படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெரிய தேயிலை எஸ்டேட்டுகளும், இருநூற்றுக்கும் மேற்பட்ட சிறு, குறு தேயிலை எஸ்டேட்டுகளும் உள்ளன. இவற்றில் 2 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், அரசு தேயிலை எஸ்டேட் உள்ளிட்ட எஸ்டேட் நிர்வாகத்தினர், “தேயிலை விவசாயத் தொழில்தான். அது அத்தியாவசியப் பட்டியலில்தான் வருகிறது. எனவே, தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குத் திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் இந்த மாதம் சம்பளம் கிடைக்காது” என மிரட்டி, தொழிலாளர்களை வேலைக்கு அழைக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். தேயிலை விவசாயத் தொழிலாக இருந்தாலும் அது வெறுமனே தேயிலை பறிப்பதுடன் நின்றுவிடுவதல்ல. அந்தப் பணியில் ஈடுபட்டால் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க முடியாது.

நெருக்கடியான சூழலில் தொழிலாளர்கள் பணிக்குச் சென்று கொரோனா தொற்றுக்குள்ளானால் பொறுப்பேற்பது யார் எனக் கேள்வி எழுப்பியுள்ள தேயிலைத் தொழிலாளர்கள், இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு தங்களுக்கு தீர்வைத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: மருத்துவர்கள் ரெயின்கோட் அணிந்து சிகிச்சை... செர்பியாவுக்கு 90 டன் உபகரணங்கள் ஏற்றுமதி - வெடித்த சர்ச்சை!