Tamilnadu

“கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ரோபோக்களை இலவசமாக தருகிறோம்” -தாமாக முன்வந்த திருச்சி ரோபோட்டிக் நிறுவனம்! 

தமிழகத்திலும், இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது. மேலும் பல்லாயிரம் பேர் வீட்டிலும், மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இப்படி இருக்கையில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிகிச்சை அளிப்பது மிகவும் சவாலான நிலைக்கு தள்ளப்படும் நிலை ஏற்படலாம். அதிலும், மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்களே வெகுவாக சிரமம் மேற்கொள்ளலாம்.

ஆகையால் இதற்கு நிவாரணமாக திருச்சியைச் சேர்ந்த தனியார் ரோபோட்டிக் நிறுவனம் ஒன்று தாமாக முன்வந்து தான் தயாரித்துள்ள ரோபோக்களை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

ட்ரோன், ரோபோ போன்றவற்றை தயாரித்து வரும் புரபெல்லர் டெக்னாலஜிஸ் என்ற ரோபோட்டிக் நிறுவனம் ஜாபி மற்றும் ஜாபி மெடிக் என்ற இருவகையான ரோபோக்களை தயாரித்து வருகிறது.

இது தொடர்பாக பேசியுள்ள அந்நிறுவனத்தின் சி.இ.ஓ முகமது ஆஷிக் ரகுமான், மருத்துவ மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாற்றகாக செயல்படக் கூடிய வகையில் ஜாபியும், அத்தியாவசிய பொருட்களை டெலிவரி செய்யக்கூடிய வகையில் ஜாபி மெடிக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

இதில் ஜாபி, மருத்துவர்களுக்கு உதவியாகவும், நோயாளிகளுக்கு தேவையான மருந்து உணவு போன்றவற்றை வழங்க பயன்படுத்தலாம். இது மொபைல் மூலமாகவும், வாய்ஸ் இன்ட்ராக்டிவ் மூலமாகவும் செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுளது.

அதேபோல, ஜாபி மெடிக் ரோபோ ரோவர் வகையைச் சேர்ந்தவை. இது 1 கி.மீ வரை சுமார் 20 கிலோ பொருட்களை கொண்டு செல்லும் திறனுடையது. இதன் மூலம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும். மேலும், சேனிடைசர் தெளிக்கவும் பயன்படுத்தலாம் என கூறுகிறார் ஆஷிக் ரகுமான்.

கையிருப்பாக ஜாபி ரகத்தில் 9 ரோபோக்களும், ஜாபி மெடிக் ரகத்தில் ஒன்றும் உள்ளது. அரசு அங்கீகரித்தால் இதனை இலவசமாக வழங்கத் தயாராக உள்ளோம். ஏற்கெனவே இந்த வகை ரோபாக்கள் சீனா மற்றும் ஜப்பானில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் பயனடுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவ பணியாளர்களின் நலன் கருதி இதனை விரைவில் மத்திய மாநில அரசுகள் சோதனைக் குட்படுத்தி பரிசிலித்தால் நலம் பயக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Also Read: “கொரோனா ஊரடங்கில் கடைபிடிக்கவேண்டியவை - எந்தெந்த கடைகள் எவ்வளவு நேரம் செயல்படலாம்?” : அரசு அறிவிப்பு!