Tamilnadu

“மதுரையில் பிரசவ வலியில் துடித்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்த காவலர்” : குவியும் பாராட்டுக்கள்!

மதுரை மாவட்டம் தேவி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் - ஸ்ரீமதி தம்பதி. கடந்தாண்டு திருமணமான நிலையில் ஸ்ரீமதி கர்ப்பமாக இருந்துள்ளார். அதனால் மனைவியை மதுரையில் தங்கவைத்துவிட்டு சமீபத்தில் வேலைக்காக மணிகண்டன் சென்னை வந்துள்ளார்.

இதனிடையே, ஸ்ரீமதிக்கு பிரசவ காலம் நெருங்கிவிட்டதால் அலுவலகத்தில் மணிகண்டன் விடுமுறை கேட்டுவிட்டு மதுரைக்கு வருவதற்கு தயாராக இருந்துள்ளார். இந்நிலையில், நாளை விடுமுறை எடுத்து மதுரைக்கு புறப்படலாம் என மணிகண்டன் நினைத்த நிலையில் திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இதனால், போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் மணிகண்டன் மதுரை வர முடியாமல் சென்னையிலேயே இருந்துள்ளார். ஸ்ரீமதிக்கு அப்பா இல்லாததால் மணிகண்டன்தான் அரவணைத்து பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றய தினம் ஸ்ரீமதிக்கு பிரசவலி வந்துள்ளது.

சிவராமகிருஷ்ணன்

இதனையடுத்து ஸ்ரீமதி கணவரின் நண்பர் முருகேசன் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளார். மருத்துவமனைக்கு வாகனம் தேடி அழைந்து எங்கும் கிடைக்காத நிலையில் ஒரு கட்டத்தில் வேதனையில் முருகேசன் அழத் தொடங்கியுள்ளார்.

அப்போது, அங்கிருந்த சோதனைச் சாவடி மையத்தில் இருந்த போலிஸாரிடம் முழு விவரத்தையும் முருகேசன் கூறியுள்ளார். நிலைமையை உணர்ந்த தெப்பக்குளம் காவலர் சிவராமகிருஷ்ணன் உதவ முன்வந்துள்ளார். அப்போது ஊரடங்கை மீறி நகருக்குள் வந்த கார் ஒன்றை வழிமறித்து அந்த காரில் பெண்ணின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

அங்கு வலியால் துடித்த ஸ்ரீமதியை காரில் ஏற்றிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மேலும் கார் ஓட்டுநனருக்கு டீசலுக்காக தனது பணத்தை சிவராமகிருஷ்ணன் வழங்கியுள்ளார். இதனையடுத்து சென்னையில் இருக்கும் மணிகண்டனை மதுரைக்கு அழைத்துவரவும் ஏற்பாடு செய்து ள்ளார்.

உரிய நேரத்தில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்த்த காவல் உதவி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணனை காவல்துறை உயர் அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர்.