Tamilnadu

வென்ட்டிலேட்டர் இல்லாத அரசு மருத்துவமனைகள்: நிலை உணர்ந்து ரூ.1 கோடியே 8 லட்சம் நிதி வழங்கிய CPIM எம்.பி!

உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 4,22,566-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 18,907 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 15 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் பல இடங்களில் தற்காலிக மருத்துவமனை அமைத்து வருகின்றனர். ஆனால் அந்த மருத்துவமனைகளில் வென்ட்டிலேட்டர் வசதி இல்லாமல் இருப்பது பெரும் அவலமாக மாறியுள்ளது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் வென்ட்டிலேட்டர்கள் பல அரசு மருத்துவமனைகளில் இல்லாமலும்; பற்றக்குறையாகவும் உள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் வென்ட்டிலேட்டர் வாங்குவதற்கு மாநிலங்களவை எம்.பி., டி.கே.ரங்கராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடியே 8 லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தேவைப்படும் வென்ட்டிலேட்டர்களை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வாங்குவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடியே 8 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், கொரோனா தொற்று சிகிச்சைக்கு வென்ட்டிலேட்டர்கள் கூடுதலாக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது எனக் குறிப்பிட்டு மருத்துவப் பணியாளர்களே இந்தப் போராட்டத்தின் வீரர்கள். எனவே மற்றவர்கள் வீட்டில் இருக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: கொரோனா சிகிச்சைக்கு உபகரணங்கள் வாங்க ரூ.56.17 லட்சம் ஒதுக்கீடு : சு.வெங்கடேசன் அறிவிப்பு!

முன்னதாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 56.17 லட்சம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: #Corona LIVE | தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 1477 ஆக உயர்வு!