Tamilnadu

“பொதுத்தேர்வு எழுதும் +1,+2 மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்துக”- தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை!

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க போதுமான அளவு கிருமிநாசினி மற்றும் முகக் கவசங்கள் இருப்பை உறுதி செய்யக்கோரியும், அதிக விலைக்கு விற்பதைத் தடுக்க கோரியும் வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 15ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும், 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 24ம் தேதி முடிவடைய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல 11ம் வகுப்புக்கு இன்று மற்றும் 26 ம் தேதிகளில் தேர்வுகள் நடக்கின்றன.

இந்த பொதுத்தேர்வுக்குச் செல்லும் மாணவர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகக் கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவைகளை பயன்படுத்த அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நேரத்தை 30 நிமிடங்கள் தாமதமாகத் தொடங்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.

மேலும் தனிமைப்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்ட சென்னை, காஞ்சி மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு மையத்திற்குச் செல்ல ஏதுவாக சிறப்பு போக்குவரத்து வசதிகள் செய்யப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

Also Read: Corona: "சீனா,இத்தாலியைப் பார்த்தும் பாடம் கற்கவில்லையா தமிழக அரசு?”- சபாநாயகருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!