Tamilnadu
“கொரோனாவை வெல்வோம்”- வீட்டுச்சிறையில் முடங்கிக் கிடக்கும் குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடத்தும் இயக்குநர்!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடையே கவலையும், அச்ச உணர்வும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் குழந்தைகள் வீட்டுக்குள் அடைபட்டுள்ளனர்.
பெற்றோர்கள் குழந்தைகளைக் கட்டுப்படுத்த முடியாமலும், பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள முடியாமலும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கொரோனா குறித்து குழந்தைகளுக்கு சரிவரப் புரியாததால் அவர்கள் இனம்புரியாத அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
குழந்தைகளைப் பீடித்திருக்கும் கொரோனா அச்சத்தை விலக்கவும், அவர்களின் மனநலனைப் பேணும் பொருட்டும் இயக்குநர் வசந்தபாலன் ஒரு முன்னெடுப்பைச் செய்யவிருக்கிறார்.
‘மக்கள் ஊரடங்கு’ செயல்படுத்தப்படும் நாளைய தினத்தில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ‘கொரோனா விழிப்புணர்வு ஓவியப்போட்டியை ‘கொரோனாவை வெல்வோம்’ எனும் தலைப்பில் நடத்தத் திட்டமிட்டுள்ளார் வசந்தபாலன். அதுகுறித்த அவரது சமூக வலைதள பதிவு பின்வருமாறு :
“நண்பர்களே !
தனிமைப்படுத்துதல் தேவைதான். ஆனால் பாவம், அது குழந்தைகளுக்கு பெரும் சிறையாக இருக்கிறது. எவ்வளவு நேரம்தான் படி படி என்ற வன்முறையை குழந்தைகள் மீது பிரயோகிப்பது? இதில் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நம்மை நாமே வீடடங்கி மக்களே ஊரடங்கு ஏற்படுத்தும் நாள். வரலாற்றுத்தருணம்.
அன்று புத்தகம் வாசித்தல், டி.வி பார்த்தல், செல்போன் பயன்படுத்துதல், கேரம் போர்டு மற்றும் செஸ் விளையாடுதல் தவிர வேறு என்ன செய்யலாம்? அதனால் அன்று 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி ஒன்றை அறிவிக்கலாம் என்று தோன்றியது.
வீட்டிலிருந்தபடியே A4 வெள்ளைத் தாளில் வண்ணப் பென்சில் அல்லது சாதாரண பென்சிலில் வரைந்து அலைபேசியில் புகைப்படம் எடுத்து என் மின்னஞ்சல் முகவரிக்கு (vasantabalan@gmail.com) அனுப்பி வைக்கலாம்.
தலைப்பு : கொரோனோவை வெல்வோம்
22ம்தேதி காலை 10 மணி முதல் 23ம் தேதி காலை 10 மணி வரை வரும் மெயில்கள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும். ஓவியங்கள் அனுப்பும் குழந்தைகளின் புகைப்படம், படிக்கும் வகுப்பு, பள்ளியின் விபரம் இணைக்கப்படுதல் அவசியம்.
பெற்றோர்கள் வரைந்து தருவதைத் தவிர்க்க வேண்டும். முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்று மூன்று பரிசுகள் உண்டு. ஒருவரே எத்தனை படங்கள் வேண்டுமானாலும் வரைந்து அனுப்பி வைக்கலாம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் வசந்தபாலனின் இந்த முயற்சியை பலரும் வரவேற்றுள்ளனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?