Tamilnadu

“பொருளாதார இழப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்”-கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தில் தி.மு.க தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கொரோனா வைரஸ் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்துள்ளார்.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 8,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ், நான்கு கட்டங்களாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில், இந்தியா தற்போது 2வது கட்டத்தில் உள்ளது. இந்தியாவில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் வணிக நிறுவனங்கள் கல்வி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் பெரும் பொருளாதார பாதிப்பை இந்தியா சந்தித்து வருகின்றது.

இந்நிலையில் பொருளாதார பாதிப்பை மாநில அரசு சரிசெய்யவேண்டும் என வலியுறுத்தி, நடைபெற்று வரும் தமிழக சட்டமன்றக் கூட்டத்தில் தி.மு.க தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கொரோனா வைரஸ் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளார்.

அந்த தீர்மானம் குறித்துப் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “சிறு - குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை மூடுவதால் மிகப்பெரிய அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேலை இழப்பு, வருமான இழப்பு மற்றும் தொழில் இழப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது .

பிரிட்டன் அரசு கொரோனா பாதிப்பால், பொருளாதார எமர்ஜென்சியைக் கொண்டுவந்துள்ளது. அந்த நாட்டில் பிசினஸ் பேக்கேஜ் ரொக்க மானியமாக அளிக்கப்பட்டுள்ளது.

Also Read: #Corona LIVE | தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 1477 ஆக உயர்வு!

அதேபோல், பிரான்சில் தொழில் மானியம், வாடகை, மின் கட்டணங்கள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இத்தாலி, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் சிறு தொழில் மானியம் அளிக்கப்பட்டு, வரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் ஒடிசா அரசு, அம்மாநிலத்தில் கொரோனா வைரஸை தடுப்பதற்கு புதிய யுத்தியை பயன்படுத்தியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தாங்களாகவே அரசிடம் பதிவு செய்து, தங்களைத் தாங்களாகவே தனிமைப்படுத்திக் கொண்டால் 15 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தமிழக அரசும் பொருளாதார - சுகாதார பொது இழப்பை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Also Read: #LIVEUpdate | கொரோனா முன்னெச்சரிக்கை : சட்டப்பேரவை நாளையுடன் நிறைவு! #TNAssembly