Tamilnadu
#Corona : "எங்க குடும்பம் என்ன செய்யும்?" - வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கூலித் தொழிலாளர்கள் குமுறல்!
சீனாவில் தொற்றத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வணிக நிறுவனங்கள் முதல் மக்கள் கூடும் சந்தைகள் வரை மூடப்பட்டுள்ள நிலையில், அதை நம்பியுள்ள மக்கள் வாழ்வாதாரத்தைத் தொலைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தினக் கூலித் தொழிலாளர்கள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை தி.நகரில் உள்ள வணிக நிறுவனங்களை மூட சென்னை மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டதன் விளைவாக, என்ன செய்வதென அறியாமல் கண்ணீருடன் தவிக்கின்றனர் அன்றாடக் கூலித் தொழிலாளிகள்.
வறுமை காரணமாக, தினந்தோறும் கூட்டம் குவியும் தி.நகரையே வாழ்வாதாரமாக நம்பி பொருட்களை விற்றும், கடைகளில் கூலிக்கும் பணியாற்றும் இவர்களின் வாழ்க்கையை தொற்று வைரஸான கொரோனா சிதைத்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை என நோய்த்தடுப்பைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் அரசு, ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து அவர்களைத் தெருவில் நிறுத்தியிருக்கிறது.
"கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க அடிக்கடி கைகளை சோப்புப் போட்டு கழுவச் சொல்கிறீர்கள். எங்களுக்கு குடிக்கவே நல்ல குடிநீர் இல்லை. நாங்கள் எங்கிருந்து சோப்புப் போட்டுக் கழுவுவது?" எனக் குமுறுகிறார் கூலித் தொழிலாளி ஒருவர்.
"கோயம்பேடு மார்க்கெட்டை நம்பி லட்சம் பேர் வாழ்கிறார்கள். கொரோனா அச்சுறுத்தலால் மார்க்கெட்டை மூடவிருப்பதாக தகவல் வருகிறது. அப்படிச் செய்தால் லட்சம் பேரின் வாழ்க்கையும், அவர்களின் குடும்பங்களும் நிர்க்கதியில் நிற்கும் சூழல் ஏற்படும்" எனக் கொந்தளிக்கிறார் காய்கறி வியாபாரி ஒருவர்.
"கொரோனா போல எந்தத் தொற்று வந்தாலும் அரசு, பணக்காரர்களை காப்பாற்றத்தான் நடவடிக்கை எடுக்கிறது. ஏழைகளுக்கு எந்த சுகாதார வசதிகளும் செய்து தருவதில்லை. ஏழைகள் சாவதைப் பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை" எனக் குமுறுகிறார்கள் பொதுமக்கள்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதாக மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் அரசு அதற்கு பதிலீடாக, கூலித் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்; வரி, வாடகை போன்றவற்றிலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார்கள் பொதுமக்கள்.
இன்று தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதோடு, அன்றாடக் கூலி தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கி அவர்கள் வாழ்வைக் காப்பாற்றவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!