Tamilnadu

கொரோனா பீதி: “எந்த சூழலிலும் பால் விநியோகம் தடைபடாது; வதந்திகளை நம்ப வேண்டாம்” - பால் முகவர்கள் சங்கம்!

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பால் விநியோகத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருவதால் அதற்கு எதிர்வினையாற்றி தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “சீனாவில் உருவாகி இனம், மொழி, மதம் என்கிற பிரிவினைகள் இன்றி பல்வேறு நாடுகளிலும் புலம்பெயர்ந்து, இந்தியாவிலும் அடைக்கலமாகி, "தேசிய பேரிடர்" என அறிவிக்க காரணமான "கொரானா வைரஸ்" தற்போது தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை.

அதிலும் இல்லாத விசயங்களை எல்லாம் இருப்பது போன்றும், சிறு, சிறு விசயங்களை கூட ஊதி.., ஊதி..., பெரிதாக்கியும் சமூக வலைதளங்களில் பரப்பி புரட்சி செய்பவர்களால் தான் தேவையற்ற வதந்திகள் பரப்பப்பட்டு, தற்போது நாடு முழுவதும் அசாதாரண சூழ்நிலை உருவாகியுள்ளது.

தற்போது தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும், பாடசாலைகளையும், பொதுமக்கள் அதிகளவில் கூடுகின்ற திரையரங்குகள், சுற்றுலா தலங்கள் என அனைத்தையும் மூடி அவசர நிலை பிரகடனப்படுத்த வேண்டிய நிலைக்கு மத்திய, மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன என்றால் அது மிகையல்ல.

ஒட்டுமொத்த இந்தியாவே தனது மக்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என போராடி வரும் வேளையில் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என பொதுமக்கள் அனைவருக்கும் எளிதில் செரிமானம் ஆகக் கூடிய, உயிர் காக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் விநியோகத்திலும், பால் உற்பத்தியிலும் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால்வளத்துறை சார்ந்த தொழிலாளர்கள் என அனைவரும் தத்தமது குடும்பத்தினர் அனைவரின் உடல் நலத்தின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டு கவனமுடன் செயல்பட வேண்டிய தருணமிது.

மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவர்களின் சரியான அறிவுறுத்தல்கள், அறிவுரைகளை மட்டும் முறையாக கடைபிடித்து, தேவைப்பட்டால் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வதின் மூலம் அந்நோய் தாக்குதலில் இருந்து முழுமையாக நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்பதால் "கொரானா வைரஸ்" குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் எந்த ஒரு தகவலையும் உண்மை என நம்பி பால் முகவர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் எவரும் அச்சப்படத் தேவையில்லை.

அத்துடன் இது போன்ற பல்வேறு இக்கட்டான காலங்களில் பால் விநியோகத்தில் ஏற்படும் அசெளகரியங்களை சில சமூக விரோதிகள் பயன்படுத்திக் கொண்டு பால் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும், பால் கிடைக்காது என வதந்திகளை பரப்பி அதன் மூலம் ஆதாயம் அடைய முயன்றதை பொதுமக்களும், பால் முகவர்கள் சமுதாயமும் நன்கறிவோம்.

தற்போதும் அது போன்ற சூழல் தென்படுவதால் பால் முகவர்கள், பால் நிறுவனங்கள் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட்டு பொதுமக்களுக்கு எந்த ஒரு சூழ்நிலையிலும் பால் தங்குதடையின்றி கிடைத்திட தேவையான நடவடிக்கைகளை எடுத்து அதனை உறுதி செய்திட வேண்டுகிறோம்.

எனவே பால் கிடைக்காது, தட்டுப்பாடு ஏற்படும் என்பது போன்ற வதந்திகளை கேள்விப்பட்டால் பொதுமக்கள் எவரும் நம்ப வேண்டாம் எனவும், எந்த ஒரு சூழலிலும் பால் தங்குதடையின்றி விநியோகம் செய்திட பால் முகவர்கள் எப்போதுமே தயார் நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் பால் அத்தியாவசியமான உணவுப் பொருளாக விளங்கி வருவதால் அதன் உற்பத்தியிலும், விநியோகத்திலும் எந்த ஒரு சுணக்கமோ அல்லது தடையோ இல்லாமல் செயல்படுமாறும், அண்டை மாநிலங்களுக்கு செல்லும் போக்குவரத்து காரணமாக "பால் கிடைக்காது" என எவரேனும் வதந்திகளை பரப்பினால் அவர்கள் குறித்து உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு அவ்வாறு வதந்திகளை பரப்புவோர் மீது புகார் அளிக்குமாறும், அது குறித்த தகவல்களை சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வருமாறும் பொதுமக்களையும், பால் முகவர்களையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

Also Read: #Corona LIVE | தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை எண்ணிக்கை 1477 ஆக உயர்வு!

தற்போதைய சூழலில் பொதுமக்களுக்கு "கொரானா வைரஸ்" பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள் என அனைவரும் கூட்டாக இணைந்து முழுமையான அர்ப்பணிப்பு உணர்வோடும், மனிதநேயத்தோடும் செயல்பட்டு வருவதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தனது பாராட்டுகளை உரித்தாக்குகிறது.” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: #CoronaAlert : அச்சத்தில் பொதுமக்கள் - கொரோனா பரவாமல் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள கட்டுப்பாடுகள்!