Tamilnadu
“அ.தி.மு.க திட்டங்களின் மூலம் 1 யூனிட் மின்சாரத்தையாவது தயாரித்திருக்கிறீர்களா?” - தி.மு.க MLA கேள்வி!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் தொகுதி மக்களுக்காக சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் பேசிவருகின்றனர்.
இந்நிலையில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, பெரும் குற்றங்கள் நடைபெறுவதற்கு முதல் காரணம் மதுபானம் தான் எனக் குறிப்பிட்டு “மது நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் கேடு” என வாசகங்கள் எழுதிவிட்டு தமிழ்நாடு அரசே மதுபானங்களை விற்பனை செய்வதா எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், “2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுக்கடைகளைக் குறைப்போம் என அறிவித்தீர்கள். இந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு கடைகளை குறைத்துள்ளீர்கள் என அமைச்சர் தெரிவிக்கவேண்டும்.
24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் 2,050 பார்களுக்கு அனுமதி வழங்கியுள்ளீர்கள். ஒரு ஊழியர் தவறு செய்தால் கூட 11 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அப்படி விதிக்கப்படும் அபராதத் தொகை எதற்காக பயன்படுத்தப்படுகிறது என அமைச்சர் விளக்க வேண்டும்.
ஆட்சிக்கு வந்தால் படிப்படியாக மதுக் கடைகளை மூடிவிடுவோம் எனக் கூறப்பட்டது. 2016-ல் 6,000 டாஸ்மாக் கடைகள் இருந்தன. உச்சநீதிமன்ற அறிவுரைப்படி 1,000 கடைகள் மூடப்பட்டன. ஆனால், தமிழக அரசு கூறியபடி இன்று தமிழகத்தைப் பார்த்தால் பல மதுக்கடைகளை முழுவதுமாக மூடியிருக்க வேண்டும். ஆனால் இன்று மதுக்கடைகள் அதிகமாகத் தான் இருக்கின்றன. பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் எனக் கூறி மக்களை ஏமாற்ற வேண்டாம்” எனத் தெரிவித்தார்.
எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப்பிரதேச கிராமத்தில் 70 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாத சூழ்நிலையில் மின்சாரத்தைக் கொடுத்த ஆட்சிதான் தி.மு.க ஆட்சி.
மின்துறையில் 50 ஆயிரத்து 613 இடங்கள் காலியாக உள்ளன. இவ்வளவு பணியிடங்கள் காலியாக இருந்தால் எப்படி மக்களுக்கு இந்த அரசு சீரான மின்சாரம் கொடுக்கமுடியும்” என ஆஸ்டின் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, “2 லட்சத்து 80 ஆயிரம் கோடியில் மின் திட்டங்கள் கொண்டு வரப்படும் என விஷன் 2023 என்று அம்மையார் ஜெயலலிதா அறிவித்தார். கடந்த 9 ஆண்டுகளாக எத்தனை மின் திட்டங்களை இந்த ஆட்சி கொண்டு வந்துள்ளது. இதுவரை 23 மின் திட்டங்களை அறிவித்து உள்ளீர்கள். 2020ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளீர்கள்.
இதுவரை நீங்கள் அறிவித்த திட்டத்தின் மூலம் ஒரு யூனிட் மின்சாரத்தையாவது தயாரித்துள்ளீர்களா?” என்று கேள்வி எழுப்பியவர் இதுவரை தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட மின் திட்டங்களின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைப் பயன்படுத்தியே மின் மிகை மாநிலம் என இந்த அரசு தெரிவித்து வருகிறது” என்று குற்றம்சாட்டினார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !