Tamilnadu
“ஊழல் பட்டியல் பா.ஜ.கவிடம் இருப்பதால் NPRக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மறுக்கிறார்கள்” : மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவையில் இன்று (11-03-2020) நேரமில்லா நேரத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சிஏஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர்-க்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
அப்போது பேரவையில் அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“2019ம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் பின்னணியில் எடுக்கப்படக்கூடிய என்.பி.ஆர்-ல் சிறுபான்மையினர் உள்பட அனைத்து தரப்பு மக்களும் அச்சத்தில் இருக்கிறார்கள்.
என்.பி.ஆர் - 2020 படிவத்தில் கேட்கப்பட்டிருக்கக்கூடிய கேள்விகள், அதில் கணக்கெடுப்பாளர்கள் கேட்கவேண்டிய ஆவணங்களின் பட்டியல் குறித்த வழிகாட்டுதல்கள் இவை எல்லாம், பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட காரணமாக அமைந்திருக்கிறது. என்.பி.ஆர் - 2020 படிவத்தில் இருக்கும் சில கேள்விகளைத் தவிர்க்குமாறு மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதியிருப்பதாக ஏற்கனவே இந்த அவையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு என்ன பதில் வந்திருக்கிறது? என்பதை நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
2019 குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எல்லாம் அந்தந்த மாநில மக்களின் விருப்பத்தை உணர்ந்து தங்களுடைய நிலையை மாற்றிக் கொண்டிருக்கின்றன.
பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், அம்மாநில சட்டமன்றத்தில் என்.பி.ஆர் 2010 படிவத்தின் அடிப்படையில்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் என்.ஆர்.சி கிடையாது என்றும், தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்.
ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி 2020 என்.பி.ஆர். படிவப்படி கணக்கெடுப்பை நடத்த முடியாது என்று அமைச்சரவையில் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார். அதைத் தொடர்ந்து தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் "எனக்கே பிறப்புச் சான்றிதழ் இல்லை சட்மன்றத்தில் என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும்" என அறிவித்திருக்கிறார்.
ஆகவே, ஏப்ரல் 1 முதல் என்.பி.ஆர் பணிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் என்.ஆர்.சிக்கு வழிகோலும், என்.பி.ஆர் கணக்கெடுப்பை நடத்தமாட்டோம் என அறிவித்து அமைச்சரவையில், சட்டமன்றத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
மேலும், இது சம்பந்தமாக சென்னை வண்ணாரப்பேட்டை, மண்ணடியில் தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. போராடிக் கொண்டிருக்கும் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற ஒரு வாக்குறுதியை இந்த அமைச்சரவையில் இருக்கும் மூத்த அமைச்சர்களோ, அல்லது முதலமைச்சரோ அறிவிக்க வேண்டும் என்று இந்த அரசை நான் வலியுறுத்தி வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
(குறுக்கீடு)
நானும், தமிமுன் அன்சாரி, அபுபக்கர் அவர்களும் எழுப்பிய கேள்விகளுக்கு சில விளக்கங்களை அமைச்சர் தந்திருக்கிறார். ஏதோ தி.மு.க கூட்டணியில் இருந்தபோது ஏற்கனவே மத்தியில் இருந்த அரசு இதை நடைமுறைப் படுத்தியதாக சொல்லி இருக்கிறார். அதற்கு ஒரு விளக்கத்தை எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.
இப்போது மத்திய அரசு வெளியிட்டிருக்கும் 2020 என்.பி.ஆர் படிவத்தில் இருக்கும் கெடுபிடிகள் அப்போது கிடையாது. குறிப்பாக ஆவணங்கள் எதையும் காட்டச் சொல்லி கணக்கெடுப்பாளர் கேட்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படவில்லை. குடும்பத் தலைவரின் தாய், தந்தை ஆகியோரின் பிறந்த தேதி கேட்கப்படவில்லை. குடும்பத் தலைவரின் தாய், தந்தை இறந்திருந்தால் கூட அவர்களின் பெயரையும், பிறந்த தேதியையும் கேட்டுப் பெறுங்கள் என்றும் கூறிடவில்லை. பிறந்த தேதிக்கு ஆவணங்கள் கேட்கப்படவில்லை.
குடும்பத் தலைவரின் தாய்மொழி கேட்கப்படவில்லை. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் தாய்மொழியும் கேட்டுப் பதிவு செய்யப்படவேண்டும் என்றும் கூறப்படவில்லை. 2010 என்பிஆர் கணக்கெடுப்பின் நோக்கம் இந்தியாவில் குடியிருப்போரை கணக்கெடுக்கும் பணி மட்டுமே என்பது சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, பான்கார்டு, பாஸ்போர்ட் எதையும் ஆவணமாக கேட்கவில்லை. இன்னும் ஆணித்தரமாக சொல்ல வேண்டும் என்று சொன்னால், என்.பி.ஆர் 2010 படிவம் 5-15- 2ல் மிகத் தெளிவாக பிறந்த தேதி குறித்து எந்த ஆவணத்தையும் பார்க்கத் தேவையில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆகவே 2010ல் எடுக்கப்பட்ட என்.பி.ஆர், வழக்கமான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மட்டுமே. அதை நாங்கள் எதிர்க்கவில்லை. அதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். ஆனால் 2020 என்.பி.ஆர் கணக்கெடுப்பு, என்ஆர்சி தயாரிப்பதற்காகவே எடுக்கப் படுகின்றது என்பது, படிவங்கள் மூலம் வெளிப்படையாகவே தெரிகிறது. பாதிப்பிற்கு என்ன ஆதாரம்? எங்கே ஆவணங்கள் கேட்டார்கள் என்றெல்லாம் நீங்கள் கேட்கிறீர்கள். இதைப்பற்றி இந்த அவையில் ஏற்கனவே கூறியிருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் கூறுகிறேன். மேலே சொல்லப்பட்டதுதான் ஆதாரம்.
இப்படித்தான் புதிய என்.பி.ஆரில் ஆவணங்கள் கேட்கப்பட்டிருக்கிறது. இன்னொன்றையும் இந்த அவையில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். தி.மு.க மத்திய அரசில் பங்கேற்றபோது என்.பி.ஆர் எடுக்கப்பட்டது என்கிறீர்கள். அந்த என்.பி.ஆர் குடியிருப்புகளை மட்டும் கணக்கெடுக்க நடத்தப்பட்டிருக்கிறது. இதுதான் உண்மை. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் சட்டம் அப்போது இல்லை. இல்லவே இல்லை.
இந்த என்.பி.ஆர் மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தி, சமூக நல்லிணக்கத்தை, பன்முகத்தன்மையைச் சிதைக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்படும் தேசிய குடியுரிமைப் பதிவேட்டைத் தயாரிக்க வழிகோலும் வகையில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. ஆகவே என்.பி.ஆரை தற்போதைய வடிவில் நிறைவேற்ற மாட்டோம் என்று அமைச்சரவையிலும், இந்தப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்தி அமர்கிறேன்.
(குறுக்கீடு)
நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றிவிட்டால் அதுகுறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்ற விளக்கத்தை அமைச்சர் எடுத்து சொல்லி இருக்கிறார். நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின் நீங்கள் அரசு சார்பில் கடிதமே எழுதியிருக்கிறீர்கள். எனவே சட்டம் இயற்றிவிட்டால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்ற விளக்கத்தை எப்படி ஏற்றுக்கொள்வது? ஆகவே மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதுகுறித்து உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க சார்பில் வலியுறுத்துகிறேன்.” என உரையாற்றினார்.
NPR-க்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற இயலாது எனவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். தீர்மானம் நிறைவேற்றாததைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க அடையாள வெளிநடப்பு செய்தது.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறுகையில், அ.தி.மு.க அமைச்சர்களின் ஊழல் பட்டியல் மத்திய அரசிடம் இருப்பதால், NPR-க்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு மறுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!