Tamilnadu
“தமிழகத்தில் 1,583 யானைகள் இறப்பு - வனப்பகுதியில் சமூக விரோதிகள் அட்டகாசமா?” : தி.மு.க எம்.எல்.ஏ ஆவேசம்!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று துவங்கியது. வரும் ஏப்ரல் 9-ம் தேதி வரை மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெறவிருக்கிறது.
இன்றைய கூட்டத்தில், 2020-2021 வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கை விவாதத்தில் தி.மு.க உறுப்பினர்கள் கலந்துகொண்டு கேள்வி எழுப்பினர்.
அப்போது பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக கேள்வி எழுப்பிய தா.மோ.அன்பரசன், “ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆதம்பாக்கம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி 3.48 கோடி ரூபாய் செலவில் ஏரியை தூய்மைப்படுத்தி பூங்கா அமைத்து நடைபாதை அமைக்க நிதி ஒதுக்கியும் இதுவரை அந்தப் பணி தொடங்கப்படாமல் உள்ளது.
இதேபோல், வேளச்சேரி பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டு நங்கநல்லூர் அருகே 600 மீட்டர் பணி மட்டுமே முடிவடையாத சூழலில் இருந்தது.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டு காலம் ஆகியும் இன்னும் அந்தப் பணி தொடங்கப்படாமல் உள்ளது. உடனடியாக அந்தப் பணியைத் தொடங்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்” என வலியுறுத்தினார்.
மேலும் வனத்துறை தொடர்பாகப் பேசிய அவர், தமிழகத்தில் 2011 - 2012ம் முதல் 2019 - 2020ம் ஆண்டு வரை 5 கோடியே 40 லட்சம் மரம் நடப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்தார்.
2012ம் ஆண்டு ஜெயலலிதா 110 விதியின் கீழ் தமிழகத்தில் இயற்கையைக் காக்கும் வகையில் 19 ஆயிரத்து 75 ஏக்கர் பரப்பளவில் 38 கோடி ரூபாய் செலவில் தேக்கு மரம் நடப்படும் எனவும் அறிவித்தார். தற்போது வரை எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என்பதை அமைச்சர் தெரிவிப்பாரா எனக் கேள்வி எழுப்பினார்.
இதேபோல் யானைகள் கணக்கெடுப்பில் 2005ஆம் ஆண்டு 3,867 யானைகள் இருப்பதாக கொள்கை விளக்க புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2019ஆம் ஆண்டு 2,767 யானைகள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனில், 1,583 யானைகள் இறந்தது ஏன்?
சமூக விரோதிகள் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதாகவும், போதிய உணவு மற்றும் நீர் இல்லாத காரணத்தினாலும் ரயில்களில் மோதி அடிபட்டதாலும் யானைகள் இறப்பதாகத் தெரிகிறது.
யானைகள் முகாம் நடத்தும் தமிழக அரசு, யானைகள் மீது கவனம் செலுத்தாதது அதிர்ச்சி அளிக்கிறது. சமூக விரோதிகளை தடுத்து யானைகளை காப்பாற்ற அரசு முன்வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும், நீலகிரியில் வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் மரங்களை வெட்டாமல், வருவாய்த் துறைக்கு சொந்தமான இடங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?