Tamilnadu

“அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை டிஸ்மிஸ் செய்யவேண்டும்” - தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்!

குமுதம் ‘ரிப்போர்ட்டர்’ செய்தியாளர் கார்த்தி மீதான தாக்குதலுக்கு மூலக்காரணியான பால்வளத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்யவெண்டும் என தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க மாநில தலைவர் பொன்னுசாமி வெளியிட்டு அறிக்கையில், “ஆவின் ஒன்றிய தலைவர் பதவிக்கு நியமனம் செய்வது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மனுக்குமான உள்கட்சி மோதல் குறித்து செய்தி வெளியிட்ட "குமுதம் ரிப்போர்ட்டர்" இதழின் செய்தியாளர் கார்த்தி மீது கடந்த சில தினங்களுக்கு முன் மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியிருப்பதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகை, தொலைக்காட்சியின் செய்தியாளர்கள் தொடர்ந்து அரசியல் குண்டர்களாலும், சமூக விரோதிகளாலும் தாக்கப்பட்டு வருவது சற்றும் ஏற்புடையதல்ல.

மேலும் இதுபோன்ற தவறான செயல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவேண்டிய காவல்துறையினர் அமைதியாக கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதை காண்கையில் ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக, ஆளும் வர்க்கத்தினரின் கைப்பாவையாக காவல்துறை இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

எனவே குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் செய்தியாளர் கார்த்தி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கைது செய்து அவர்களை சிறையில் அடைத்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும், இந்தத் தாக்குதலின் மூலக்காரணியாக விளங்கும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமாறு தமிழக அரசையும், தமிழக ஆளுநரையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “பத்திரிகையாளரை தாக்கிய ஆணவ அமைச்சர் மீது கடும் நடவடிக்கை தேவை!” - மு.க.ஸ்டாலின் ஆவேசம்!