Tamilnadu

கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட 2 செங்கல் சுவர்கள் கண்டுபிடிப்பு : நாகரீகத்துடன் வாழ்ந்த தமிழர்கள்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த 2015ல் அகழாய்வுப் பணி தொடங்கியது. மத்திய, மாநில தொல்லியல் துறையினர் ஐந்து கட்டங்களாக அகழாய்வு நடத்தினர். தற்போது 6ம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி 19ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

மேலும், இங்கு 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழா்கள் பயன்படுத்திய பலவகைப் பொருள்கள் கண்டறியப்பட்டது. குறிப்பாக, பண்டைய தமிழர்களின் நெசவுத் தொழில், கட்டிடக்கலை, கால்நடை வளர்ப்பு, நீர் மேலாண்மை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தன.

இதனிடையே ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிக்கு ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. கீழடியில் இம்மாதம் முழுவதும் நீதியம்மாள் நிலத்தில் நான்கு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுப் பணி நடைபெறுகிறது.

இந்நிலையில், கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்ட 2 பழங்கால செங்கல் சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பானை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நாகரீகத்துடன் வாழ்ந்து வந்தார்கள் என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அது தற்போது மீண்டும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த அகழாய்வுப் பணிக்காக 100க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள், தொல்லியல் துறை மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு தொடங்கியதை அடுத்து பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது.

Also Read: “கீழடி ஆய்வில் இந்திய தொல்லியல்துறையின் பங்கு என்ன? ஒதுக்கிய நிதி எவ்வளவு?”- மாநிலங்களவையில் வைகோ கேள்வி!