Tamilnadu

“ரஜினிகாந்த் மீதான புகாரில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?” - நீதிமன்றம் கேள்வி!

தந்தை பெரியார் குறித்து அவதூறா கருத்துகளை பரப்பிய நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேலும் ஒரு புதிய வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஜனவரி 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டுவிழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்.

பெரியார் பற்றி பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதுடன், பொது அமைதியைக் குலைக்கும் வகையிலும் நடிகர் ரஜினிகாந்த் பேசியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி திருவல்லிகேணி காவல்நிலையத்திலும், கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தார்.

ஆனால், ரஜினி மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினிகாந்த் மீதான புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை காவல் ஆணையர், திருவல்லிக்கேணி காவல் ஆய்வாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கினை மார்ச் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Also Read: “ரஜினி இஸ்லாமியர்களுக்காக இப்படித்தான் போராடுவார்” - ரஜினி முன் சொன்ன அறிவிப்புகள் என்னவானது?