Tamilnadu

விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம் பேராசிரியை - உடல் உறுப்பு தானம் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு!

தஞ்சையில் விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றிய இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த பேருந்து நடத்துனர் இளங்கோ என்பவரின் மகள் கனிமொழி (25). இவர் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் துறையில் கௌரவ பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 27ம் தேதி அன்று பல்கலைக்கழகம் அருகிலேயே சாலை விபத்தில் படுகாயமடைந்து தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார் கனிமொழி.

பெற்றோர், கனிமொழியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்ததையடுத்து இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் என உடல் உறுப்புகள் தஞ்சை தனியார் மருத்துமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டது.

பின்னர், போலிஸாரின் பாதுகாப்புடன் போக்குவரத்து சரி செய்யப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கும், மதுரை தனியார் மருத்துவமனைக்கும் அதிவிரைவாக கொண்டு செல்லப்பட்டது.

உயிரிழந்த இளம்பெண் கனிமொழியின் உடல் உறுப்புகளின் தானம் மூலம் உறுப்புகள் பாதிக்கப்பட்ட 7 பேர் பாதுகாக்கப்பட்டு மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

இதுகுறித்து கனிமொழியின் சகோதரர் சதீஷ்குமார் பேசும்போது, “கல்வியில் சிறந்து விளங்கிய கனிமொழி தொல்லியல் துறையில் சாதிக்கவேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு முன்னேறி வந்த நிலையில், சாலை விபத்தில் உயிரிழந்தது கடும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் உடல் உறுப்புகள் தானத்தின் மூலமாக 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதன் மூலம் தன் தங்கையை உயிருடன் காண்கிறேன்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Also Read: தொடர் கொள்ளையர்களை சிக்கவைக்க உதவிய அமெரிக்கப் பெண் : அடையாறு கொள்ளை வழக்கில் நடந்தது என்ன?