Tamilnadu

“அருந்ததியர் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடும் இயக்கம் தி.மு.க” - ஆதித்தமிழர் பேரவை நன்றி!

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலுக்கான தி.மு.க வேட்பாளர்களாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் போட்டியிடுவார்கள் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

73 ஆண்டு இந்திய அரசியல் வரலாற்றில், அருந்ததியர் சமூகத்தில் இருந்து இரண்டாவது நபராக மாநிலங்களவைக்கு செல்கிறார் அந்தியூர் செல்வராஜ். முதலாமவர் தி.மு.க சார்பில் மாநிலங்களவைக்குச் சென்ற வி.பி.துரைசாமி.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளராக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜை அறிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஆதித்தமிழர் பேரவை நிறுவனர் தலைவர் அதியமான் விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு :

“மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் வாய்ப்பு வழங்கி இருக்கிறது.

இந்த வாய்ப்பை வழங்கிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் கடந்த காலத்தில் கல்வி வேலைவாய்ப்புகளில் அருந்ததியர் சமூகம் மிக மிக பின்தங்கி இருந்த காரணத்தினால் ஆதித்தமிழர் பேரவை கோரிக்கையினை ஏற்று தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் 3% விழுக்காடு இட ஒதுக்கீட்டை அன்றைய முதல்வர் தி.மு.க தலைவர் கலைஞர் 2009இல் வழங்கினார்.

இந்த பத்தாண்டுகளில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த எண்ணற்றவர்கள் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் மிகப்பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் அருந்ததியர் வரலாற்று மீட்பில் இந்திய விடுதலைப் போருக்கு போராடிய மாமன்னர் ஒண்டிவீரனுக்கு பேரவையின் கோரிக்கையை ஏற்று மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்டது, துப்புரவுத் தொழிலாளர்கள் துயர்துடைக்க துப்புரவுத் தொழிலாளர் வாரியம் அமைத்தது என தி.மு.க அருந்ததியர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறது.

அரசியலிலும் பின்தங்கியிருந்த அருந்ததியர் சமூகத்திற்கு முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் அவர்களுக்கு தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்ததன் மூலமாக அரசியலிலும் அருந்ததியருக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

தி.மு.க இவ்வாறு அருந்ததியர் சமூகத்தினுடைய அரசியல் கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வாய்ப்புகளை வழங்கி இச்சமூகத்தின் அனைத்து முன்னேற்றங்களும் தி.மு.கவே முழுமுதற் காரணமாக இருந்திருக்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த அந்தியூர் செல்வராஜுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுத்தமைக்காக தி.மு.க தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அருந்ததியர் சமூகத்தின் சார்பிலும் ஆதித்தமிழர் பேரவையின் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: மாநிலங்களவை வேட்பாளர்கள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு!