Tamilnadu
"அரசியல் லாபத்துக்காக வன்முறையைத் தூண்டுகிறார்” - எச்.ராஜா மீது போலிஸில் புகார்!
பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சி.ஏ.ஏ-வுக்கு ஆதரவாக பேரணி நடத்துவதாகக் கூறி வன்முறையில் இறங்கியது இந்துத்வா கும்பல்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வடகிழக்கு டெல்லியில் வெடித்த வன்முறை முப்பதுக்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு வாங்கி இருக்கிறது. 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருக்கிறார்கள். முஸ்லிம்களின் கடைகளுக்கும், வீடுகளுக்கும் தீ வைக்கப்பட்டது.
இந்நிலையில், வன்முறையைத் தூண்டும் விதமாக சமூக வலைதளங்களில் எச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் பதிவிட்டு வந்தனர். இதையடுத்து, எச்.ராஜா மீது மனிதநேய மக்கள் கட்சி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேலையூர் காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் எஸ்.கே. ஜாஹீர் ஹுசைன் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “டெல்லியில் நடந்த கலவரம் போன்றதொரு சம்பவம் நாளை சென்னை வண்ணாரப்பேட்டையிலும் நடக்கலாம் என்றும், அமைதியாக ஜன்நாயக வழியில் போராடி வரும் மக்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் கலவரம் நடக்கும் என்றும் மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா.
மேலும், முன்னாள் பா.ஜ.க நிர்வாகியான கல்யாணராமன் என்பவர் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்தும் விதமாக பேசியும் எழுதியும் வருகிறார்.
இவர்களின் நோக்கமே அமைதியாக இருக்கும் இரு சமூக மக்களிடையே வெறுப்பை விதைத்து அதன் மூலம் அரசியல் லாபமடைவதே ஆகும்.
இந்தியா முழுவதும் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் சட்டங்களுக்கு எதிராக மக்கள் போராடிவரும்போது பா.ஜ.க வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ, கபில் மிஸ்ரா பேச்சால் டெல்லியே பற்றி எரியும் நிலையில் உள்ளது.
அமைதிப் பூங்காவான தமிழகத்திலும் அதே போன்றதொரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் குறிப்பிட்ட இரு சமூக மக்களிடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் செயல்படும் எச்.ராஜா மற்றும் கல்யாணராமன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!