Tamilnadu

“பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு வேண்டும்”: பா.ஜ.க பேரணிக்கு பயந்து பிரியாணி கடைக்காரர்கள் போலிஸிடம் மனு!

நாடுமுழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் மிகத் தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் சில இடங்களில் பா.ஜ.கவினர் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக போராட்டங்கள், பேரணி என நடத்தி வருகின்றனர்.

அதன்படி தலைநகர் டெல்லியில் அமைதியான முறையில் சி.ஏ.ஏ.விற்கு எதிராக போராடியவர்கள் மீது சி.ஏ.ஏ.விற்கு ஆதரவாக பேரணி நடத்திய பா.ஜ.கவினர் தாக்குதல் நடத்தியதன் விளைவாக தற்போதைய டெல்லி வன்முறைக்கு காரணமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், நாடுமுழுவதும் பா.ஜ.கவினர் ஆதரவு பேரணிக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.கவினர் பேரணி நடத்திக் கொள்ள எடப்பாடி அரசின் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

அதன்படி நாளைய தினம் பா.ஜ.கவினர் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பேரணி செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்தப் பேரணி செய்தி பத்திரிகைகளில் வெளியானதை அடுத்து திருப்பூர் கடைவீதிகளில் உள்ள பிரியாணி கடைக்காரர்கள் அச்சமடைந்து ஒன்றிணைந்து, பிரியாணி கடை உரிமையாளர்கள் சார்பாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் நேற்றைய தினம் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில், பா.ஜ.கவினர் பேரணியின் போது தங்களின் பிரியாணி அண்டாவிற்கும், கடைக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும் எனக் கூறியுள்ளனர். பிரியாணி கடைக்காரர்கள் பதறிப்போய் இதுபோல போலிஸாரிடம் மனு கொடுப்பதற்கு காரணம் உண்டு.

கடந்தாண்டு கோவையில் சசிகுமார் என்ற இந்து முன்னணி ஊழியர் படுகொலை செய்யப்பட்டார். அவரின் இறுதி ஊர்வலத்தில் பா.ஜ.கவினர் மற்றும் இந்து முன்னணி கும்பல்கள் வன்முறைகளில் ஈடுபட்டனர். மேலும் கடைவீதிகளில் இருந்த கடைகளைச் சூறையாடி செல்போன்களை திருடிச் சென்றவர்கள், பிரியாணி அண்டாவையும் திருடிச் சென்றனர்.

இந்தச் சம்பவம் தற்போதும் தொடராமல் இருப்பதற்காவே திருப்பூரில் இஸ்லாமியர்கள் பகுதியில் பேரணி நடைபெறுவதால் பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “பா.ஜ.கவினர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி திடீர் இடமாற்றம்” : மோடி அரசின் அராஜக நடவடிக்கை!