Tamilnadu
தேர்தல் அறிக்கையில் மட்டும்தான் மதுவிலக்கு கொண்டுவரப்படுமா? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!
உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட டாஸ்மாக் இடமாற்றம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதை அடுத்து, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் கார்த்திகேயன், ஆதிகேசவலு அமர்வு முன் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டது.
அப்போது, இந்த விவகாரம் முழுக்க முழுக்க அரசியலமைப்பு சட்டம் சார்ந்த பிரச்சனை. மாநில அரசு ஒரு மக்கள் நல அரசாக இருக்க வேண்டும். ஒவ்வொருவருடைய கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, அரசியலமைப்பு சட்டப்படி கிராம பஞ்சாயத்துகள் சமூக நலன் மற்றும் பொதுமக்களின் உடல்நலம் தொடர்பான நடவடிக்கை மேற்கொள்வது கடமை என்று தெரிவித்த நீதிபதிகள் ஏன் மாநில அரசு கிராம பஞ்சாயத்துகளை மதிக்கக் கூடாது என்றும், இதுதொடர்பாக ஏன் சட்டம் கொண்டு வரக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என தெரிவித்துவிட்டு ஆட்சிக்கு வந்த பின்பு ஏன் அமல்படுத்துவதில்லை? டாஸ்மாக் கடைகள் எங்கே அமைக்க வேண்டும் என விதிகள் இருந்தாலும், வருங்கால தலைமுறையினரின் நலன் கருதி சில விதிகளையும் கொண்டுவரலாம் என தெரிவித்தனர்.
இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்து கூட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பால் நடத்தப்படுவது இல்லை. அதனால் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினாலும் அதற்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த வழக்கில் மதுக்கடைகளை அமைப்பது தொடர்பான டாஸ்மாக் நிறுவன சுற்றிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசு விதிகளை கொண்டுவர உத்தரவிட்டு விசாரணையை ஆறு வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.
டாஸ்மாக் கடைகளை வேண்டாம் என கிராம சபை கூட்டத்தில் மக்கள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை நடைமுறைப்படுத்துவதில் அரசு தயக்கம் காட்டுவது ஏன்? அரசின் கொள்கை முடிவாக மதுபானக்கடை இருந்தாலும், மக்களின் நலன் கருதி சில முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டும்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்