Tamilnadu

மாணவர்களின் விழிப்புணர்வு சுவர் ஓவியத்தை அழித்துவிட்டு ’அம்மா’ விளம்பரம் செய்த அ.தி.மு.க !

சென்னை வியாசர்பாடியில், சென்னை பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் சுற்றுச்சுவர் முழுவதும் கட்சி விளம்பரங்கள், குப்பைகள் என பயன்பாட்டுக்கே இல்லாமல் அசுத்தமாக இருந்துள்ளது.

மேலும் சுற்றுச்சுவர்களில் பொதுமக்கள் சிறுநீர் கழிப்பது, குப்பைகள் கொட்டப்படுவதுமாக இருந்ததால் அதனை சுத்தம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டுவர மாணவர்கள் சிலர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி கல்லூரி முதல்வரின் அனுமதியுடன் கல்லூரியில் முதுகலை சமூகப்பணி பயிலும் மாணவர்கள் சுற்றுச்சுவரை தூய்மைப்படுத்தி சுவற்றில் வெள்ளையடித்து இரவு பகலாக விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து வந்துள்ளனர்.

அப்படி மாணவர்களின் ஓவியங்களை தடுத்த சில அ.தி.மு.க உறுப்பினர்கள் சிலர், ’நாங்கள் இந்த சுவரில் கடந்த 14 ஆண்டுகளாக விளம்பரம் செய்துவருகிறோம். எனவே இந்த சுவரில் நாங்கள் மட்டும்தான் கட்சி விளம்பரம் செய்வோம்’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் மாணவர்களுக்கும் அ.தி.மு.கவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கல்லூரி நிர்வாகத்தினர் அ.தி.மு.க நிர்வாகிகளுடன் பேசியுள்ளனர். சுவரை விட்டுக்கொடுக்க மறுத்த அ.தி.மு.க-வினர் நாங்கள் 2 சுவற்றில் வரைந்துக் கொள்கின்றோம்.

மாணவர்கள் 4 சுவரிலும் வரைந்துக் கொள்ளட்டும் என பேசி முடிவுக்கு வந்துள்ளனர். கல்லூரி நிர்வாகமும் வேறு வழியில்லாமல் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.

மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சுவற்றில் மாணவர்கள் பெண்கள் நலன், சாலை பாதுகாப்பு, விவசாயத்தின் முக்கியம், தமிழ் பாரம்பரியம் உள்ளிட்டவற்றை ஓவியங்களாக வரைந்து அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர்.

அதேசமயம், அ.தி.மு.க-வினரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் விழிப்புணர்வு ஓவியத்தை அழித்துவிட்டு சுவர் விளம்பரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Also Read: தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், கண்டுபிடித்த அதிகாரியை ‘தூக்கி அடித்த’ அ.தி.மு.க அரசு!