Tamilnadu

"வெள்ள தடுப்புச் சுவர் கட்டும் பணியில் கோடிக்கணக்கில் முறைகேடு” - தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

சைதாப்பேட்டை அடையாறு ஆற்றங்கரையோரம் வெள்ளப் பாதுகாப்புக்காக சுமார் 104 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புச் சுவர் பணியில், மணல் கொள்ளை உள்ளிட்ட ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனைக் கண்டித்து, சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன் தலைமையில் அடையாறு ஆற்றங்கரையில் கட்டப்பட்ட வெள்ளத்தடுப்புச் சுவர் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டுவதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. தினந்தோறும் பல ஆயிரம் லாரிகள் மூலம் மணல் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது.

வெள்ளத் தடுப்புச் சுவர் முறைகேடு குறித்து பொதுப்பணித்துறை செயலாளரிடம் கடிதம் கொடுத்தும் அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வெள்ளத் தடுப்புச் சுவர் பணியில் நடைபெற்றுள்ள பல கோடி ரூபாய் முறைகேடு குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கவேண்டும்.” என வேண்டுகோள் விடுத்தார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.கவினர் மற்றும் பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Also Read: வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு : விசாரணை அறிக்கையை அரசுக்கு அனுப்பியது ஏன்? - ஐகோர்ட் காட்டம்!