Tamilnadu
"ஏன் பா.ஜ.கவிற்கு பயந்து காலில் விழுந்து கிடக்கிறீர்கள்?” - அ.தி.மு.க அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், 11 எல்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு குறித்தும், NPR குறித்தும் கேள்வி எழுப்பினார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின் பேச அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் அடையாள வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “11 எல்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவாகத் தெரிவித்துள்ளது. அதுகுறித்து அவையில் கேள்வி எழுப்பினேன்.
ஆனந்த விகடன் தலையங்கத்தில் ‘ஒரு தீர்ப்பு பல கேள்விகள்’ என்கிற தலைப்பில் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள். ஆளுநரைச் சந்தித்து மனு அளித்ததற்கே 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏக்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
உச்சநீதிமன்றத்துக்கு எழுப்பியுள்ள கேள்வியில், குறிப்பிட்ட கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் அக்கட்சிக்கு எதிராகத் திரும்பும் ஒரே பிரச்னையில் வெவ்வேறு விதமான தீர்ப்புகள் ஏன் எனக் கேட்கப்பட்டுள்ளது.
முதல்வரை மாற்றவேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்த 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்கிறார். ஆட்சியே இருக்கக்கூடாது என வாக்களித்த 11 எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மணிப்பூர் மாநில உயர்நீதிமன்றத்தில் இதே போன்ற வழக்கில் ஆறு மாதத்திற்குள் தீர்ப்பு வர வேண்டும் என்று தீர்ப்பு வந்திருந்தது. இதுகுறித்து விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனும் கோரிக்கையை சட்டப்பேரவையில் முன்வைத்தேன். என்னைப் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. பேசிய சிலவற்றையும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கிவிட்டார்கள்.” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “பல மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். தமிழக சட்டப்பேரவையிலும் சிஏஏ-விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி வருகிறோம்.
NPR எனப்படும் மக்கட்தொகைக் கணக்கெடுப்பையாவது தமிழகத்தில் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி இருக்கிறோம். அதற்கு முதல்வர் பதிலளிக்காமல், வருவாய்த்துறை அமைச்சர் பேசுகிறார்.
நாங்கள் வாக்கு வங்கி அரசியல் செய்வதாகக் குற்றம்சாட்டுகிறார். நாங்கள் வாக்கு வங்கிக்காக பேசுகிறோம் என்றால் நீங்கள் பா.ஜ.க ஆட்சிக்கு பணிந்து, அஞ்சி, காலில் விழுந்து நடப்பது ஏன்? எங்கே ஆட்சி போய் விடுமோ என்ற படத்தில்தான் உள்ளார்களே தவிர மக்களைப் பற்றிச் சிறிதும் கவலை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!