Tamilnadu
TNPSC தேர்வு முறைகேட்டிற்கு பயன்படுத்தப்பட்ட ‘மேஜிக் பேனா’ : சென்னையில் ஒருவர் கைது!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-4, குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாகவும், கிராம நிர்வாக அதிகாரி தேர்வில் நடைபெற்றுள்ள மோசடி பற்றியும் சி.பி.சி.ஐ.டி. போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்விலேயே முறைகேடு நடைபெற்றது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2017-ம் ஆண்டு நடந்த குரூப்-2ஏ தேர்விலும் மோசடியாக பலர் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த கிராம நிர்வாக அதிகாரி தேர்விலும் பலர் மோசடியாக பணியில் சேர்ந்துள்ளனர். சென்னை முகப்பேரை சேர்ந்த தரகர் ஜெயக்குமாரிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து முறைகேட்டில் பலர் பணியில் சேர்ந்துள்ள தகவல் பற்றி டி.என்.பி.எஸ்.சி. சார்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.
தேர்வு முறைகேடு தொடர்பாக கடந்த 14-ந்தேதி வரையில் 49 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். டி.என்.பி.எஸ்.சி ஊழியர் ஓம்காந்தனுடன் இணைந்து தரகர் ஜெயக்குமார் தேர்வர்களிடம் பணவசூலில் ஈடுபட்டது அம்பலமானது. இதையடுத்து 2 பேரையும் சி.பி.சி.ஐ.டி போலிஸார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், தேர்வு முறைகேடு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. விடைத்தாள்களை திருத்துவதற்கு உடந்தையாக இருந்த டிரைவர்களும் பிடிபட்டனர். விடைத்தாள்களை திருத்தி கொடுத்த தமிழ் ஆசிரியரும் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அவரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலிஸர் முடிவு செய்துள்ளனர். இன்று அல்லது நாளை அவர் காவலில் எடுக்கப்பட உள்ளார்.
இந்நிலையில் தேர்வு முறைகேடு தொடர்பாக சென்னை புரசைவாக்கத்தில் மேலும் ஒருவர் பிடிபட்டுள்ளார். அவரது பெயர் அசோக் என்று தெரியவந்துள்ளது. அவர் தேர்வு முறைகேட்டிற்காக தானாக அழியும் மை உடைய மேஜிக் பேனாவை தயாரித்து தரகர் ஜெயக்குமாருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த ‘மேஜிக் பேனா’ தயாரித்துக் கொடுப்பதற்காக பல லட்ச ரூபாய் பணம் கைமாறியதாக தெரிகிறது. இதுதொடர்பாக அசோக்கிடம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலிஸ் அலுவலகத்தில் வைத்து அசோக்கிடம் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையின் முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!