Tamilnadu
“வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்த தூண்டியது யார்?” - சட்டப்பேரவையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. கேள்விநேரத்தின்போது பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
சட்டப்பேரவை விவாதத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மான கோரிக்கை ஆய்வில் உள்ளதாக சென்ற கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளீர்கள். மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் அதை நிறைவேற்ற வேண்டும்.” என கோரிக்கை விடுத்தார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண்கள் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் காவல்துறையை தூண்டிவிட்டு தடியடி நடத்தியதற்கு யார் காரணம் என கேள்வி எழுப்பினார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ சென்று பேசி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதேபோல் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டுவரவேண்டும். தமிழர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் இதைக் கொண்டுவர வேண்டும். போராட்டம் கண்டனக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நாங்கள் மட்டுமல்ல பல்வேறு அமைப்புகள் நடத்தி வருகின்றன.
தமிழகத்தில் மக்களைச் சந்தித்து கையெழுத்து இயக்கம் மூலம் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கையெழுத்துகள் பெறப்பட்டு நேற்றைய தினம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதை குடியரசுத் தலைவரிடம் அளிக்க உள்ளார்கள்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” எனப் பேசினார். CAA எதிர்ப்பு தீர்மானம் குறித்துப் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததையடுத்து தி.மு.க தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்