Tamilnadu
இயற்கை உபாதையால் சாலையோரம் ஒதுங்கிய தலித் இளைஞர்... அடித்தே கொன்ற பொதுமக்கள் - விழுப்புரத்தில் பரபரப்பு!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த காரை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயதுடைய சக்திவேல். இவர், விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் கடந்த ஓராண்டு காலமாகப் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த செவ்வாய் அன்று இரவுப் பணிக்குச் சென்றுவிட்டு மறுநாள் காலை வீடு திரும்பிய சக்திவேலுக்கு பணியிடத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில், தன்னுடைய ஆதார் உள்ளிட்ட விவரங்களைக் கொண்டு வரும்படி கூறியதால் மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு தனது பைக்கில் சென்றிருக்கிறார் சக்திவேல்.
அப்போது, திடீரென வண்டியில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதால் இரு சக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டே வந்தபோது இயற்கை உபாதை ஏற்பட்டதால் மறைவான இடம் நோக்கிச் சென்றுள்ளார்.
அந்த சமயத்தில், அருகில் இருந்த வயலில் பெண் ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதேச்சையாக மலம் கழிக்க ஒதுங்கிய சக்திவேலை கண்டதும், தன்னிடம் தவறாக நடந்துகொள்ளவே அங்கு வந்திருப்பதாக எண்ணிய அந்தப் பெண் கூச்சலிட்டதும் அவரது கணவர் உள்ளிட்ட ஊர்மக்கள் கூடியிருக்கின்றனர்.
இதனைக் கண்டு பயந்தோடிய சக்திவேலை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், அவரது கை கால்களைக் கட்டி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயத்திற்கு ஆளானார் சக்திவேல். இதனையறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் சக்திவேலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
அதன் பிறகு விவரம் அறிந்து மருத்துவமனைக்கு வந்த சக்திவேலின் சகோதரி தெய்வானை, படுகாயமடைந்த அண்ணனைக் கண்டதும் அழுது துடித்திருக்கிறார். பின்னர் வீட்டிற்கு அழைத்துச் சென்றதும் அங்கு நிலை தடுமாறிய சக்திவேல் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார்.
இதனையடுத்து, பெரியதச்சூர் போலிஸாருக்கு தகவல் கொடுத்ததும் நேரில் வந்த போலிஸார் சக்திவேலின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார், சக்திவேலை தாக்கிய செ.புதூர் கிராம மக்கள் 7 பேர், கூச்சலிட்ட பெண் மற்றும் அவரது கணவர் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆதிக்கசாதியைச் சேர்ந்தவர்கள் என்றும், சக்திவேல் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உண்மையை அறியாமல் அப்பாவி இளைஞரை சரமாரியாகத் தாக்கி உயிரிழக்கச் செய்தது விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!