Tamilnadu

“Flipkart பெயரில் நூதன மோசடி - சுதாரித்ததால் தப்பித்த பேங்க் பேலன்ஸ்” : தென்காசி போலிஸார் எச்சரிக்கை!

திருநெல்வேலியில் இருந்து சமீபத்தில் தனி மாவட்டமாக பிரிந்த தென்காசியில் மோசடி கும்பல் ஒன்று நூதன முறையில் பொதுமக்களிடம் பணம் பறிக்கத் தீட்டிய திட்டத்தை போலிஸார் தடுத்துள்ளனர்.

தென்காசியைச் சேர்ந்த கும்பல் ஒன்று பிரபல ஆன்லைன் டெலிவரி நிறுவனமான பிளிப்கார்ட்டின் பெயரில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பல்வேறு வங்கிகளில் இருந்து தகவல்களைப் பெற்று வங்கி வாடிக்கையாளருக்கு பரிசுத் தொகை வழங்கவிருப்பதாக கடிதம் அனுப்பியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், எங்களது ஆன்லைன் சேவையை மேம்படுத்தும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளதாகவும் அந்தப் பரிசு தங்களுக்கு கிடைத்துள்ளது என்றும் வங்கிக் கணக்கு எண், ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட தகவல்களைக் கொடுத்தால் பணம் உடனடியாக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுளனர்.

இதனால் சந்தேகமடைந்த வங்கி வாடிக்கையாளர் ஒருவர் போலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுகுறித்து விசாரித்து வந்தனர். பிளிப்கார்ட் நிறுவனத்தை தொடர்புகொண்டு இதுகுறித்து கேட்டபோது அப்படி எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்றும், நாங்கள் வாடிக்கையாளரிடம் இருந்து தகவல் எதுவும் பெறுவதில்லை என்றும் பதிலளித்துள்ளனர்.

இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுவரும் கும்பலை பிடிக்க போலிஸார் முயற்சி செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, இவ்வகை மோசடியில் பொதுமக்கள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காக சமூக வலைதளங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Also Read: இறந்த IT ஊழியர்களின் பெயரில் கிரெடிட் கார்டு மோசடி - ஐதராபாத்தை அதிரவைத்த சைபர் கிரைம்