Tamilnadu

"நிர்வாகத் திறனற்ற ஆட்சியால் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 23,500 கோடியாக உயர்வு” : பழனிவேல் தியாகராஜன் MLA

தமிழகத்தின் பொருளாதார நிலை மிகமோசமாக இருப்பதாக தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க இருக்கிறது. துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில், தமிழக பட்ஜெட் நிலை குறித்து சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி செயலாளருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில், “நிர்வாகத் திறனற்ற அ.தி.மு.க அரசினால் தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.23,500 கோடியாக உயர்ந்துள்ளது. உற்பத்தி வளர்ச்சியில் 50% வீழ்ச்சியடைந்துள்ளது. மாநிலத்தின் கடன் ரூ.4 லட்சம் கோடியைக் கடந்திருக்கும். கடந்த 9 ஆண்டுகளில் கடன் 4 மடங்கு அதிகரித்திருக்கிறது.

கடனுக்கான வட்டி செலுத்தவே அரசின் வருமானம் சென்றுவிட்டால் திட்டங்களுக்கு பணம் இருக்காது. தமிழகத்தின் நிதி சூழல் கர்நாடகா, கேரளாவைப் போல அன்றி, பீகார், உத்திர பிரதேசம் போல ஆகிக்கொண்டிருப்பதாக நிதி ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.”எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசியுள்ள அவர், “சட்டவிரோதமாக பணபலம் பெற்ற பி.ஜே.பியிடம் ஆட்சியதிகாரம் இருப்பதால் சர்வாதிகாரி போல செயல்படுகிறது; ஆனால், டெல்லியில் அதன் பிரிவினைவாத - வெறுப்பு அரசியலை ஏற்காமல் – செயல்திறன் அடிப்படையில் மக்கள் ஆதரவளித்துள்ளனர்.

வகுப்புவாத - பிரிவினைவாத வெறுப்பு அரசியலுக்கு எல்லை உண்டு என்பதும், எதிர்காலம் என்பது மாநில அரசியல் கட்சிகளைப் பொறுத்தே அமையும் என்பதும் டெல்லி தேர்தல் முடிவுகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: வேளாண் மண்டல அறிவிப்பு: “கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வீண்பழி சுமத்துவதா?”- ஆர்.எஸ்.பாரதி கண்டனம்!