Tamilnadu
“தமிழகத்திற்கு வெறும் 10,000 ரூபாய்... உ.பிக்கு 7,000 கோடியா?” - கொந்தளித்த சு.வெங்கடேசன் எம்.பி!
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் ரயில்வே திட்டங்களுக்கு வெறும் 10,000 ரூபாய் மட்டும் ஒதுக்கிவிட்டு, உத்தர பிரதேசத்திற்கு 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் சு.வெங்கடேசன் எம்.பி.,
நேற்று மதுரையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் தெரிவித்ததாவது, “கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மத்திய ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்தின் புதிய திட்டங்களின் மதிப்பு சுமார் 12 ஆயிரம் கோடி. அந்தத் திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் வெறும் 10,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது அநீதியின் உச்சம். தமிழக மக்களின் ‘அன்புக்கு’ பா.ஜ.க அரசு அளித்துள்ள பரிசு இதுதான்.
ஆனால், உத்தர பிரதேசத்தை மையமாக வைத்துச் செயல்படும் வடக்கு ரயில்வேயில் புதிய திட்டங்கள் செயல்படுத்த ஒதுக்கப்பட்டுள்ள தொகை சுமார் ரூ. 7 ஆயிரம் கோடி. இந்தியாவிலே ஜி.எஸ்.டி அதிகம் செலுத்தும் மாநிலங்களில், முதல்நிலைப் பட்டியலில் தமிழகம் உள்ளது. அப்படி இருக்கையில் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்காதது தமிழக மக்களை வஞ்சிக்கும் செயலாகும். துரோகத்தின் உச்சம் இது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரயில்வே தொடர்பான கோரிக்கைகளில் தலையிட்டு கூடுதல் நிதி பெற நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக மக்களும் ஓரணியில் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும். மத்திய அரசின் துரோகத்திற்கு எதிராக வினையாற்றவேண்டும்.
மதுரையின் எய்ம்ஸ் மருத்துவமனைப் பணிகள் ஜப்பான் நாட்டின் ஜெய்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டு பணிகள் நடை பெற்று வருகின்றன. ஜெய்கா நிறுவனம் வருகிற டிசம்பர் மாதம் திட்ட வரைவு அறிக்கையை இறுதி செய்யவுள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட வேண்டும். அதற்கான மாணவர் சேர்க்கையை இந்தாண்டே தொடங்கியிருக்க வேண்டும். மங்களகிரி, பீபீ நகரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுவிட்டது. மதுரையோடு சேர்த்து அறிவிக்கப்பட்ட ஜம்மு எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை இந்தாண்டு ஆகஸ்டில் தொடங்க உள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையை தொடங்குவதற்கு தற்காலிகமாக தனி கட்டடம், 300 படுக்கைகள் கொண்ட ஒரு இணைப்பு மருத்துவமனை தேவை. அதற்கான வாய்ப்புகள் மதுரையில் அதிகமுள்ளது. ஆனால், இதுவரை தமிழக அரசு இதில் செயல்படாமல் இருந்து வருகிறது.” எனத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தமிழக மக்கள் மீது அன்பு வைத்துள்ளதாக பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா மதுரையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தது குறித்து சு.வெங்கடேசனிடம் கேட்டதற்கு, தமிழக மக்கள் மீது வைத்த ‘அன்பிற்கு’ ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கிய வெறும் பத்தாயிரம் ரூபாயே சாட்சி எனத் தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!