Tamilnadu

TNPSC முறைகேடு: பொய் வழக்கு என கோர்ட்டில் அழுத இடைத்தரகர் ஜெயகுமார்- 7 நாள் போலிஸ் காவலில் வைக்க உத்தரவு!

சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட இடைத்தரகர் ஜெயகுமாரை வரும் 13ஆம் தேதி வரை 7 நாள் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் நாகராஜன் உத்தரவிட்டார்.

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4, குரூப்-2A தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் பல தேர்வர்கள் இடைத்தரகர்கள் மூலம் பணம் செலுத்தி தேர்ச்சியடைந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தது. முக்கியமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள்தான் முறைகேட்டில் ஈடுபட்டதாக குரூப்-4 தேர்வில் 99 பேரும், தொகுதி-2A தேர்வில் 42 பேரும் முறைகேடு செய்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் நடத்திய விசாரணை மூலம் கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரிக்கக்கோரி டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் பரிந்துரைத்ததையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி போலிஸார் தொடர்ந்து நடத்தி வரும் விசாரணையில் இதுவரை குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2A தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த டி.என்.பி.எஸ்.சி அதிகாரி ஓம்காந்தனை நீதிமன்றக் காவலில் இருந்து 5 நாள் போலிஸ் காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி போலிஸார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அவரை ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களுக்கு அழைத்துச் சென்று அவர் மூலம் முறைகேடு எப்படி அரங்கேற்றப்பட்டது என்பதை நடித்துக்காட்டி வீடியோவாக பதிவு செய்து ஆதாரங்களை திரட்டவும் போலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த முறைகேட்டிற்கு மூளையாக செயல்பட்ட இடைத்தரகர் ஜெயகுமார் என்பவரை சி.பி.சி.ஐ.டி போலிஸார் தீவிரமாக தேடி வந்ததோடு அவரைப்பற்றி துப்புக் கொடுப்பவர்களுக்கு வெகுமதியும் அறிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று இடைத்தரகர் ஜெயகுமார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மாஜிஸ்திரேட் கவுதமன் அவரை ஒருநாள் நீதிமன்றக் காவலில் வைத்து இன்று எழும்பூர் சி.பி.சி.ஐ.டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதனையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயகுமார் இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது மாஜிஸ்திரேட் 10 நாள் போலிஸ் காவலில் செல்ல விருப்பமா எனக் கேட்டதற்கு பதிலளித்த ஜெயகுமார் தனக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பில்லை எனவும், தன்மீது பொய்யாக வழக்கு புனையப்பட்டுள்ளதாகவும் கண்ணீர் மல்க மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்தார்.

மேலும், போலிஸ் காவலுக்கு ஜெயகுமாரை அனுமதிக்கக்கூடாது எனவும் ஜெயகுமார் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு மதியம் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் தொடர்ந்தது. சி.பி.சி.ஐ.டி போலிஸார் தரப்பில் ஜெயகுமார் முக்கிய குற்றவாளி என்பதால் அவரை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அவகாசம் கோரியதையடுத்து நீதிபதி நாகராஜன் ஜெயகுமாருக்கு வரும் 13ஆம் தேதி வரை 7 நாள் போலிஸ் காவல் வழங்கி உத்தரவிட்டார்.

மேலும், ஜெயகுமார் தரப்பில் போலிஸ் காவலுக்கு அனுமதிக்கக் கூடாது என அளிக்கப்பட்ட மனு நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும், குடும்பத்தினர் அவரை சந்திப்பதற்கான அவகாசமும் வழங்கப்படவில்லை. ஜெயகுமாருக்கு தேவையான மருத்துவ உதவிகள் மட்டும் சீராக வழங்கப்படவேண்டும் என மாஜிஸ்திரேட் நாகராஜன் உத்தரவிட்டார்ர். இதனைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்திற்கு ஜெயகுமார் அழைத்து செல்லப்பட்டு அவரிடம் விசாரணை துவங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே விழுப்புரம் மாவட்டம் அரியூர் கிராம நிர்வாக அலுவலகர் நாராயணன் இந்த முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட ஆயுதப்படைக் காவலர் பூபதி மூலம் 5 நபர்களிடம் 55 லட்சம் ரூபாய் வரை பணம் பெற்று ஜெயகுமாரிடம் கொடுத்து அவர்களை தேர்ச்சியடையச் செய்தார் என்பது தெரியவந்ததையடுத்து, சி.பி.சி.ஐ.டி போலிஸார் அவரைப் பிடித்து இந்த முறைகேடு தொடர்பாக இன்னும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்தும் ஜெயகுமாருக்கும் அவருக்குமான தொடர்பு குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற வி.ஏ.ஓ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாகவும், பலர் அந்த முறைகேட்டில் ஈடுபட்டு பணியில் சேர்ந்துள்ளதாகவும் அவர் வாக்குமூலம் அளித்ததாக சி.பி.சி.ஐ.டி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இது தொடர்பான விசாரணையையும் சி.பி.சி.ஐ.டி கையிலெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வழக்கைப் போலவே 2016 - 2018 வரை நடைபெற்ற பல்வேறு தேர்வுகளில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Also Read: "TNPSCScam : ஆளுங்கட்சி சார்பான ஆட்களை காப்பாற்றத்தான் இத்தனை தில்லுமுல்லு”- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!