Tamilnadu
அமைச்சர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பழங்குடியின சிறுவன் புகார் : FIR கூட பதியாத போலிஸ்!
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. அதனை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
அப்போது அங்கிருந்த கோவிலுக்குச் சென்ற அமைச்சர் கோவிலுக்கு அருகில் நின்ற பழங்குடியின சிறுவனை அழைத்தார். தயக்கத்தோடு நின்ற சிறுவனை ‘டேய் இங்க வாடா’ என ஒருமையில் அழைத்ததோடு அல்லாமல், இந்த செருப்பைக் கழற்றிவிடு எனக் கூறி தனது காலை நீட்டியுள்ளார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர். மேலும் இந்தச் சம்பவத்தின் போது புகைப்படம் எடுக்காதவாறு மறைத்து நின்ற அ.தி.மு.க-வினர் பத்திரிகையாளரை புகைப்படம் எடுக்கக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர்.
இருப்பினும் அமைச்சருக்கு பழங்குடியின மாணவர் செருப்பை கழற்றிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது நீலகிரி மாவட்டம் மசினகுடி காவல்நிலையத்தில், தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்ற வைத்து தன்னை அவமானப்படுத்தியதற்காக அவர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015ன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பழங்குடியின சிறுவன் புகார் அளித்துள்ளார்.
மேலும், அந்தப் புகாரில் அமைச்சர் சொல்லும்போது போலிஸார் மற்றும் உயரதிகாரிகள் சுற்றி இருந்ததால் அச்சத்தில் அமைச்சரின் செருப்பைக் கழற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுவரை அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. முதல் தகவல் அறிக்கை எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் உயரதிகாரிகளின் தலையீடு இருப்பதாக போலிஸார் தயக்கம் காட்டி வருகின்றனர். அமைச்சர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது மக்கள் மத்தியில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!