Tamilnadu

தேர்ச்சி பெற்றும் பணி வாய்ப்பு பறிபோன அவலம் - தேர்வாணையத்தின் மீது தேர்வர்கள் புகார்!

தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையங்கள் முறைகேடு புகார்களால் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றன. டி.என்.பி.எஸ்.சி-யை தொடர்ந்து சீருடை பணியாளர் தேர்வாணையமும் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.

சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும் இடையேயான தகவல் பறிமாற்ற சிக்கலால், இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக, 30க்கும் மேற்பட்ட தேர்வர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, சீருடை பணியாளர் தேர்வாணையம் குறிப்பிட்ட தேர்வர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், தாங்கள் சமர்ப்பித்த பல்கலைக்கழக அளவில் வெற்றிப்பெறும் வீரர்களுக்கான ஃபார்ம்-3 சான்றிதழ்கள், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் இறுதி ஒப்புதல் அளிக்கப்படாததால், நிராகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விசாரித்தபோது, ஃபார்ம்-1, ஃபார்ம்-2 சான்றிதழ்களை மட்டுமே சரிபார்க்குமாறும், ஃபார்ம்-3 பற்றி சீருடை பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் எதுவும் அறிவுறுத்தவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு போல, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சார்பு ஆய்வாளர், 2-ம் நிலை காவலர் பதவிகளுக்கான தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.

வேலூர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பயிற்சி மையத்தில் பயின்றவர்கள், இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வுக்கு திட்டமிட்டு ஆன்லைனில் நள்ளிரவு நேரத்தில் விண்ணப்பித்து குறிப்பிட்ட மையத்தை தேர்வு செய்ததாகவும், பின்னர் சிலரது உதவியுடன் எழுத்துத் தேர்வில் முறைகேடாக வெற்றி பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Also Read: TNPSC முறைகேடு : மக்களின் நம்பிக்கையைப் பொய்யாக்கிய அ.தி.மு.க அரசு - தி.மு.க இளைஞரணி போராட்டம் அறிவிப்பு!