Tamilnadu
"முறையாக விசாரணை நடத்தாவிட்டால் TNPSC முறைகேடுகளை படுகுழிதோண்டிப் புதைத்துவிடுவார்கள்” : ஆர்.எஸ்.பாரதி
அ.தி.மு.க ஆட்சி அமைந்ததிலிருந்து, அனைத்து மட்டங்களிலும் நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி மெகா முறைகேடு குறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி, அறிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :
"தமிழகத்தின் ‘வியாபம்’ எனப் பெயர் பெற்றிருக்கும் டி.என்.பி.எஸ்.சி.யின் முறைகேடுகள் இன்று-நேற்று என்றில்லாமல் அ.தி.மு.க ஆட்சி அமைந்ததிலிருந்தே தொடர்ந்து வருகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019ஆம் ஆண்டு நடத்திய குரூப்-4 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பது தற்போது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது. ஆனால் இது திடீரென நடந்த முறைகேடு அல்ல என்பதும் தற்போதைய விசாரணைகளில் தெரிய வந்திருக்கிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் மோசடி என்பது மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இருந்தே, அதாவது கடந்த 9 ஆண்டுகளாகவே நடந்து வந்துள்ளது.
குரூப்-1 பதவிகளான மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி ஆணையர், மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக 2016ஆம் ஆண்டு ஜூலை 29, 30 மற்றும் 31 தேதிகளில் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 62 பேர் சென்னை தி.நகரில் உள்ள ஒரே மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் என அப்போதே கூறப்பட்டது. அவற்றில் 22 விடைத்தாள்களில் பதிவு எண்கள் அழிக்கப்பட்டு, புதிதாக பதிவெண்கள் எழுதப்பட்டன என கூறப்பட்டது. மூன்று பேர்களின் விடைத்தாள்கள் கிழிக்கப்பட்டு, வேறு சில பக்கங்கள் இணைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் ஜெய்சிங் தலைமையிலான அதிகாரிகள், மூன்று பேரின் விடைத்தாள்களில் ஒரே கையெழுத்து இருப்பதை தடயவியல் சோதனைக்கு பின்னர் கண்டறிந்தனர். அதனை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அப்போது வேகமெடுத்த அந்த வழக்கின் விசாரணையில் இருந்த அதிகாரிகள் அனைவரும் பின்னர் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன் பின்னர் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. இதற்கு காரணம் யார் ? இந்த உத்தரவு எங்கிருந்து வந்தது? இந்த கேள்விகளுக்கு எல்லாம் இன்று வரை பதில் இல்லை.
அதேபோல, தற்போது குரூப்-4 தரவரிசை பட்டியல் வெளியான போது இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் மையங்களில் தேர்வு எழுதிய தேர்வர்கள் அதிக அளவில் முதல் 100 இடங்களுக்குள் வந்த முறைகேடு குறித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதிலும் தோண்டத் தோண்ட பூதங்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. இதுவரை இந்த வழக்கில் இடைத்தரகர்கள் மற்றும் முறைகேடாக தேர்வு எழுதிய தேர்வர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான ஜெயகுமார் தலைமறைவாக இருக்கிறார். இவ்வளவு நடைபெற்றும் தேர்வினை முழுமையாக ரத்து செய்ய முடியாது, தவறு செய்தவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க முடியும் என அமைச்சர் ஜெயகுமார் கூறுகிறார்.
99 பேருக்கு தடை, 16 பேர் கைது, இன்னமும் சிலர் கைதாக வாய்ப்பு என்பதோடு இந்த வழக்கை முடிக்க அவசரகதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ என சந்தேகம் எழுந்துள்ளது. இதன் மூலம் இதில் தொடர்புடைய ஆளும் கட்சி முக்கிய புள்ளிகளை காப்பாற்ற இந்த அரசு பகீரத முயற்சிகளை மேற்கொள்கிறது என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
துணை ஆட்சியர், டி.எஸ்.பி, வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் ஆகிய பதவிகளுக்காக, 2015-ம் ஆண்டு குரூப்-1 தேர்வு முடிவுகள் 2016-ல் வெளியிடப்பட்டது. இதில் ஸ்வப்னா என்ற திருநங்கை, தான் நன்றாக தேர்வு எழுதியும், தேர்வாகவில்லை எனக்கூறி, மறுமதிப்பீடு செய்ய விடைத்தாள் கேட்டு கூசூஞளுஊ அலுவலகத்தில் விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு விடைத்தாள்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில், விடைத்தாள் வழங்க மறுத்த வழக்கில், திருநங்கை ஸ்வப்னா சுட்டிக்காட்டினார். இதைக் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையின் பேரில், சென்னையில் உள்ள அப்போலோ பயிற்சி மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், அந்தப் பயிற்சி மைய இயக்குனர் சாம் ராஜேஸ்வரன் மற்றும் TNPSC அலுவலக ஊழியர் காசி ராம்குமாருக்கும், விடைத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து காசி ராம்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், வினாத்தாள்களை தயார் செய்யக்கூடிய பேராசிரியர்களுக்கும், முறைகேட்டில் தொடர்பு இருப்பது அம்பலமானது. அப்போலோ பயிற்சி மைய இயக்குனர் சாம் ராஜேஸ்வரன் மீதான குற்றச்சாட்டு உறுதியானால், TNPSC தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மேலும் பலர் சிக்க வாய்ப்புள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று தேறிய பெரும்பாலான மாணவர்கள் இந்த அப்போலோ பயிற்சி மையம் மற்றும் சைதை துரைசாமி நடத்தும் மனிதநேயம் அகாடமியைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. ஓரிரு பயிற்சி மையங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதன் நடைமுறை உண்மை என்ன என்பது ஆய்வுக்கும் விசாரணைக்கும் உரியவையாகும். இதை எல்லாம் சிபிசிஐடி உரிய முறையில் விசாரித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்திலும் அதிகாரத்திலும் செல்வாக்கு உள்ளோரின் பயிற்சி மையங்களின் பேரில் தேர்ச்சிப் பெற்று, முறைகேடான வழிகளில் அரசு பணியில் சேருவோர் எப்படி நியாயமான முறையில் செயல்படுவார்கள் என எதிர்பார்க்க முடியும்? குறிப்பாக குரூப்-1 மூலம் தேர்வாகும் பணியாளர்கள் பதவி உயர்வின் மூலம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளாக மாறும்போது, அவர்களின் விசுவாசம் யாரிடம் இருக்கும் என்பதை நாம் சொல்லித் தெரியத் தேவையில்லை.
நேரடியாக மக்கள் பணியில் ஈடுபட வேண்டிய இவர்கள் இதுபோன்ற முறைகேடான வழிகளில் பணியமர்த்தப்பட்டால், விரைவில் அரசு இயந்திரமே ஊழல்மயமாகி, நிலைகுலைந்து, செயலிழந்துவிடும் என்பது நிதர்சனமான உண்மை. எனவே இந்த முறைகேட்டை அரசு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். ஆனால் விசாரணையின் போக்கை கூர்ந்து கவனித்தால், ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களை காப்பாற்றும் நோக்கில், இதனை வெறும் குரூப்-4 தேர்வு முறைகேடு என சுருக்கி, சமாதி கட்டும் முயற்சிகள் நடப்பதாகவே தெரிகிறது. இதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
குரூப்-4 போலவே, 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற குரூப்-2ஏ தேர்வுகளிலும் மோசடி நடந்திருப்பதை டி.என்.பி.எஸ்.சி நிர்வாகமே ஒப்புக்கொண்டுள்ளது. அதன் தலைவர், உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் ஆலோசனையையடுத்து, குரூப் 2ஏ தேர்வு குறித்து விரிவான குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் பொருட்டு உரிய ஆவணங்களை காவல்துறையிடம் ஒப்படைத்திருப்பதாக டி.என்.பி.எஸ்.சி நிர்வாகமே தெரிவிப்பதிலிருந்து, இந்தத் தேர்வுகளின் தன்மை குறித்து உணரமுடியும். அதுபோலவே மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் முன்அனுபவச் சான்றிதழ் சரிபார்ப்பில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதை உயர்நீதிமன்றம் உறுதி செய்து, மறுஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சியில், அ.தி.மு.க ஆட்சியின் கடந்த 9 ஆண்டுகளில் குரூப் 1, 2, 3 மற்றும் 4 என அனைத்து தேர்வுகளிலும் புரையோடி முடைநாற்றமெடுக்கும் முறைகேடு மூட்டைகளை சீர்செய்யக் கிடைத்த வாய்ப்பாகக் கருதி இந்த விசாரணையின் வளையத்தை விரிவாக்க வேண்டும்.
எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதுபோல, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தரகர்களின் புகலிடமாக மாறிவிட்டது. அதனை அவர் விரிவாக எடுத்துக்காட்டியிருப்பதுடன், துறைக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ஜெயக்குமார் இதில் எத்தனை அலட்சியமாக செயல்பட்டுள்ளார் என்பதையும் அம்பலப்படுத்தி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டால்தான் முழு உண்மைகள் தெரியவரும் எனக் கூறியுள்ளார். விரிவான-முழுமையான விசாரணை நடைபெறாவிட்டால், இத்தனை ஆண்டுகாலமாக நடந்த முறைகேடுகள் அனைத்தும் படுகுழி தோண்டி புதைக்கப்படும் அபாயம் உள்ளது என எச்சரிக்க விரும்புகிறேன்.”
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?