Tamilnadu
"உத்தரவு போட்டுவிட்டு மக்களிடமிருந்து மறைப்பது ஏன்?” - காவல்துறைக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி!
சென்னையில் போராட்டங்கள் நடத்த தடை விதித்து பிறப்பித்த உத்தரவை பொதுமக்களுக்கு தெரிவிக்காதது ஏன் என, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், ஜனவரி 13 முதல் 28 வரை அனுமதியின்றி ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள்,
மனிதச் சங்கிலி உள்ளிட்டவை நடத்த தடை விதித்து, சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்தும் காயத்ரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ராஜமாணிக்கம் முன் விசாரணைக்கு வந்தபோது, காவல் ஆணையரின் உத்தரவு மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படிருப்பதாகவும், இதுகுறித்து மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது .
காவல் ஆணையர் தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், சட்டம் ஒழங்கு பிரச்சனைக்காக தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், சென்னையில் உள்ள காவல் நிலையங்களில் அறிவிப்பு பலகைகளில் இந்த உத்தரவு அறிவிப்பாக ஒட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, சென்னை மாநகரம் முழுவதும் பொருந்தும் இந்த உத்தரவை மக்களுக்கு ஏன் தெரியப்படுத்தவில்லை எனக் கேள்வி எழுப்பினார். இந்த உத்தரவை மக்களிடமிருந்து மறைப்பது ஏன் என்றும் இதை மக்களிடம் தெரிவிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நீதிபதி வினவினார்.
மேலும், இது ஜனநாயக நாடு என்றும் கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மக்கள் ஒன்றுகூட காவல்துறை அனுமதி வேண்டுமா என்றும் ஒரு வேளை அவர்கள் அனுமதி பெறவில்லை என்றால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுமா எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுகள் இணையதளத்தில் வெளியிடப்படுவதாகவும், அதேபோல காவல் ஆணையர் அலுவலக உத்தரவுகளையும் இணையதளத்தில் ஏன் வெளியிடவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, இந்த உத்தரவை மக்களிடம் தெரிவிப்பது குறித்து பதிலளிக்க காவல் ஆணையர் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?