Tamilnadu

பள்ளிகளுக்கு கூடுதல் நிதி? - 5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு செய்தியை மறைக்க நாடகம் ஆடுகிறதா தமிழக அரசு?

5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் திட்டத்தின் மூலம் நடுத்தர, ஏழை மக்களை கல்விக் கூடத்திற்குள் நுழையவிடாமல் தடுத்து, பா.ஜ.க அரசின் வர்ணாசிரம தர்ம செயல்முறையை செயல்படுத்த முயற்சிக்கிறது அ.தி.மு.க அரசு.

மாணவர்களின் எதிர்காலத்தையும், தமிழ்ச் சமூகத்தின் நலனையும் உள்ளடக்கும் விதத்தில், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பலரும் கருத்தார்ந்த அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால், அ.தி.மு.க அரசு தொடர்ந்து தனது அக்கறையின்மை மூலமாக தமிழக மாணவர் சமுதாயத்துக்கு எத்தகைய படுகுழியைத் தோண்டுகிறோம் என்ற ஆபத்தை உணராமல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வைக் கொண்டுவர தீவிரமாக முயற்சித்து வருகிறது.

முன்னதாக, தமிழகத்துக்கு மட்டும் மூன்று ஆண்டுகள் விலக்கு பெற்றுள்ளோம் என்று அமைச்சர் செங்கோட்டையன் சொன்னார். ஆனால் 5-வது மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான பூர்வாங்க பணிகளை பள்ளிக் கல்வித்துறை செய்து வந்தது.

இப்போது, பொதுத்தேர்வு நடத்துவதற்கான வேலைகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. பெற்றோர்களும், ஆசிரியர்களும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வரும் நிலையில், திசைதிருப்பும் வேலைகளில் இறங்கியுள்ளது அ.தி.மு.க அரசு.

அதன் ஒருகட்டமாக, கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மட்டுமல்லாது, பிற துறை அமைச்சர்களையும் விட்டு சொல்லச் சொல்லி இருக்கிறது குயுக்தி அ.தி.மு.க அரசு.

அதன்படியே, வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி, “கல்வி வளா்ச்சிக்காக ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்த நிகழ் நிதியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் ரூபாய் 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என ஒரு விழாவில் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க அரசின் சூழ்ச்சி வலைகளுக்குள் சிக்கிவிடாமல், மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் இந்த 5 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவு செய்யவேண்டியது இந்நேரத்தில் அவசியமாகிறது.

Also Read: 5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு : குழந்தை தொழிலாளர் முறையை ஊக்குவிக்கிறதா அரசு? - ஆசிரியர் சொன்ன உண்மைக் கதை!